Published : 07 May 2024 06:31 PM
Last Updated : 07 May 2024 06:31 PM

சுவாரஸ்யம் இழந்து சோர்வூட்டும் பாதைக்குச் செல்கிறதா டி20 கிரிக்கெட் வடிவம்?

டி20 கிரிக்கெட் பேட்டிங்குக்கு சாதகமான ஒருதலைபட்சமாகச் சென்று கொண்டிருப்பது, விரைவில் களையிழந்து சுவாரஸ்யம் பறிபோய் சோர்வூட்டும் ஒரு வடிவமாக மாறிவிடும் என்று நம்மில் பல கிளாசிக் கிரிக்கெட் ஆர்வலர்கள் உணர்வது போலவே இயன் சாப்பலும் உணர்கிறார்.

இயன் சாப்பல் இப்படிக் கூறியவுடன் நம் ‘2கே கிட்ஸ்’ ஏதோ ஒரு காலத்தில் இயன் சாப்பல் 100 பந்துகளில் 27 ரன்கள் அடித்தார், அவருக்கு என்ன தெரியும் என்று அறியாமையின் உச்சத்தில் உளறாமலும். சிரிப்பே வராத மீம்களை போடாமல் இருப்பது நலம். இயன் சாப்பல் கிரிக்கெட் உலகில் மதிக்கக் கூடிய ஒரு சிறந்த கேப்டன். சிறந்த வர்ணனையாளர். இனி இவர் போன்ற சிறந்த வர்ணனையாளர்கள் தோன்றுவதற்கும் வாய்ப்பில்லை. ஏனெனில், கிரிக்கெட் அதன் நுட்பங்களுடனும், சிக்கல்களுடனும் கடினப்பாடுகளுடனும் பவுலிங், பிட்ச் உள்ளிட்ட சவால்களுடனும் ஆடப்படும்போது அதன் நுணுக்கங்களை வர்ணிப்பதில் தேர்ச்சியும் ஆர்வமும் இருக்கும்.

இப்போதைய கிரிக்கெட் வெறும் பேட்ஸ்மென் கிரிக்கெட். வலது கை பேட்டர்கள் இடது காலை இன்னும் இடது பக்கமாக ஒதுக்கிக் கொண்டு மட்டையை விட்டு விளாசும் காலம். பவுலர்கள் ஓடி வந்து 80 கிமீ வேகத்தில் Knuckle பந்துகளை வீசும் காலம். அப்படியும் 55 அடி நீள பவுண்டரியில் சிக்சர் போகும். இதில் நுணுக்கங்கள் எங்கே இருக்கிறது? ஆனால், இத்தகைய பேட்டிங்கைத்தான், பவுலிங்கைத்தான் ‘திறமை’ என்று பேசப்படும் பிரச்சாரிக்கப்படும் காலக்கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்.

ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் மிகத் துல்லியமாக மதுப்பழக்கத்தைப் பற்றி கூறிய வார்த்தைகளை டி20-க்கும் நாம் தகவமைத்துக் கூற முடியும். “ஒருவன் தான் தோல்வி அடைந்தவன் என்பதால் குடிப்பழக்கத்துக்குச் செல்லலாம்; பிறகு அக்குடியினாலேயே முழுவதும் தோல்வியடைந்து விடுகிறான்” என்றார். அதேபோல் கிரிக்கெட்டின் மரபான வடிவங்கள் தோல்வி அடைந்து விட்டது என்று டி20 என்னும் போதை வடிவத்தை அறிமுகம் செய்திருக்கலாம். ஆனால், இன்று அந்த வடிவம் கொடுக்கும் போதையே கிரிக்கெட்டை மேலும் தோல்விக்கும் அழிவுக்கும் இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

இயன் சாப்பல் கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் வேறு மொழியில் கூறுகிறார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தளத்தில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: “பெரிய ஹிட்டிங் அசுரத்தனமாக அதிகரித்துள்ளன. ஐபிஎல் 2024 சிக்சர்களுக்கான சாதனையை அமைத்து விடும் போலிருக்கிறது. கிரிக்கெட் பேஸ்பால் ஆகிறதோ?

சிக்ஸ் ஹிட்டிங் அதிகமானதற்கு இப்போதைய மட்டைகள் தயாரிப்பு ஒரு காரணம். எல்லைக்கோடு குறுகிக்கொண்டே வருகிறது. மேலும், இரவுப் பனிப்பொழிவு. இப்போதைய ட்ரெய்னிங் முறைகள் ஆகியவை பிற காரணிகள். அந்தக் காலத்து கலை ரீதியான கிரிக்கெட் ரசனை இப்போது சிக்சர்களை ரசிப்பதற்கு மாறியுள்ளது.

இயன் சாப்பல்

ஆனால், இப்படியே போய்க்கொண்டிருந்தால் டி20 காட்சிப்பொருள் விரைவில் சோர்வூட்டுவதாக மாறிவிடும். இதற்காக இன்னும் ஓவர்களைக் குறைத்தால் வீரர்களின் விசுவாசத்துக்கு அது பெரும் சவால் ஆகிவிடும். ஃபீல்டிங் என்னும் துறை அழிகிறது. காரணம், சிக்சர் மழையில் பந்தை எடுத்து, வெறுமனே த்ரோ செய்வதுதான் வேலை. முதல் தரக் கிரிக்கெட் வலுவாக இருந்தால்தான் டெஸ்ட் வீரர்களை வளர்த்தெடுக்க முடியும். இப்போது இந்த வலு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே உள்ளது.

பிசிசிஐ பெரிய அளவில் செலவு செய்வதால் கிரிக்கெட்டை ஆள்கிறது. இதனால் மற்ற நாடுகளும் அதே மாடலை பின்பற்றும். எனவேதான் மற்ற நாட்டு டி20 லீக்குகள் பெரும்பாலும் ஐபிஎல் மாடலை காப்பி செய்கின்றன. இது சுவாரஸ்யமிழப்பையே ஏற்படுத்தும்” என்கிறார் இயன் சாப்பல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x