Published : 07 May 2024 08:50 AM
Last Updated : 07 May 2024 08:50 AM

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: 400 மீட்டர் தொடர் ஓட்டத்துக்கு இந்திய அணிகள் தகுதி

புதுடெல்லி: பாரீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்துக்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் 4x400 தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்க இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தகுதி பெற்றுள்ளன. நேற்று பஹாமாஸில் நடைபெற்ற தகுதிச் சுற்று ஓட்டத்தில் பங்கேற்ற இந்திய அணிகள் வெற்றி பெற்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டி தகுதி பெற்றுள்ளன.

மகளிருக்கான 4X400 மீட்டர் பிரிவில், இந்தியாவின் ரூபால் சௌத்ரி, எம்.ஆர்.பூவம்மா, ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய அணி, பந்தய தூரத்தை 3 நிமிடம் 29.35 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்தது. அதேபோல் ஆடவர் பிரிவில் முகமது அனஸ் யாஹியா, முகமது அஜ்மல், ஆரோக்கிய ராஜீவ் மற்றும் அமோஜ் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி, 3 நிமிடம் மற்றும் 3.23 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்தது. இதன்மூலம் இரு அணிகளும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான மகளிர் அணியில் தமிழகத்தை சேர்ந்த சுபா வெங்கடேசனும், ஆடவர் அணியில் ஆரோக்கிய ராஜீவும் இடம் பெற்றுள்ளனர். இருவருமே திருச்சியைச் சேர்ந்தவர்கள்.

சுபா வெங்கடேசன்: இந்திய அணியில் இடம்பெற்ற சுபா வெங்கடேசனின் தந்தை, கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சென்னையிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்டிஏடி) கீழ் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் சுபா வெங்கடேசன். இதைத் தொடர்ந்து தேசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை சுபா வென்றார். 2018-ல் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் இடம்பெற்றிருந்த இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. தற்போதைய வெற்றி மூலம் ஒலிம்பிக் போட்டிக்கும் பயணமாகிறார்.

ஆரோக்கிய ராஜீவ்: திருச்சியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவின் தந்தை ஒய். சவுந்தர ராஜனும் தடகள வீரர்தான். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதலில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றவர். சவுந்தர ராஜன் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். ஆரோக்கிய ராஜீவின் தாய் தினக்கூலி தொழிலாளியாவார்.

கடும் பிரச்சினைகளுக்கு இடையே தடகளத்தில் தடம்பதித்த ஆரோக்கிய ராஜீவ், 2018-ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணியினருடன் இணைந்து தங்கம் வென்றார். இதே போட்டியில் இவர் இடம்பெற்ற ஆடவர் அணி 400 மீட்டர் ஆடவர் தொடர் ஓட்டத்தில் வெள்ளியை வென்றது. பஹாமஸ் போட்டி வெற்றியின் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தடம்பதிக்கவுள்ளார். ஆரோக்கிய ராஜீவ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x