T20 WC | “சிறந்த வீரரான விராட் கோலிக்கு எதிராக வியூகம் அமைப்போம்” - பாபர் அஸம்

பாபர் அஸம் மற்றும் கோலி | கோப்புப்படம்
பாபர் அஸம் மற்றும் கோலி | கோப்புப்படம்
Updated on
1 min read

லாகூர்: இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி சிறந்த வீரர் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான தங்களது திட்டம் குறித்து அவர் தெரிவித்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தச் சூழலில் அயர்லாந்து புறப்படுவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை பாபர் சந்தித்தார். ஏனெனில், அயர்லாந்து தொடர் முடிந்ததும் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடுகிறது. பின்னர் அங்கிருந்து அப்படியே அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அணி செல்கிறது.

“ஓர் அணியாக எதிரணியினரின் பலத்தை அறிந்து, வியூகம் வகுப்பது வழக்கமானது. தனியொரு வீரருக்கு எதிராக வியூகம் வகுப்பது இல்லை. ஆடும் லெவனில் உள்ள அனைத்து வீரர்களையும் கருத்தில் கொண்டுதான் திட்டமிடல் இருக்கும். அமெரிக்காவின் கள சூழல் குறித்து நமக்கு அதிகம் பரிச்சயமில்லை. அதனால், அங்கு சென்ற பிறகுதான் தெளிவான புரிதலை பெற முடியும்.

இந்தியாவின் விராட் கோலி சிறந்த வீரர்களில் ஒருவர். அவருக்கு எதிராகவும் எங்களது வியூகம் அமைக்கப்படும். பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் விரைவில் அணியுடன் இணைவார். தற்போது அவர் அணியுடன் தொடர்பில் உள்ளார். தினந்தோறும் பல்வேறு விஷயங்களை நாங்கள் கலந்து பேசி வருகிறோம்” என பாபர் தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பையில் சிறந்த செயல்திறனை கோலி வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 10 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 488 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா வெற்றி பெற சிறப்பாக ஆடி 82 ரன்கள் எடுத்து உதவினார்.

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 9-ம் தேதி அன்று நியூயார்க் நகரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் முதல் சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in