அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜோகோவிச்-முர்ரே சந்திக்க வாய்ப்பு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜோகோவிச்-முர்ரே சந்திக்க வாய்ப்பு
Updated on
1 min read

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் முன்னாள் சாம்பியன்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின்ஆன்டி முர்ரே ஆகியோர் மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் போட்டி வரும் 25-ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. அதற்கான டிரா (யாருடன் யார் மோதுவது என்பதை குலுக்கல் முறையில் தேர்வு செய்வது) வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்படி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் பங்கேற்காத நிலையில், உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் போட்டித் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஜோகோவிச் தனது முதல் சுற்றில் ஆர்ஜென்டீனாவின் டீகோஸ்வார்ட்ஸ்மேனை சந்திக்கவிருக்கிறார். காலிறுதியில் ஜோகோவிச்சும், ஆன்டி முர்ரேவும் மோத வாய்ப்புள்ளது. காலிறுதிக்கு முன்னதாக ஜோகோவிச்சுக்கு பெரிய அளவில்சவால் இல்லையென்றாலும், ஆன்டி முர்ரே தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் சோங்காவை சந்திக்க வாய்ப்புள்ளது. சமீபத்திய போட்டிகளில் ஜோகோவிச், முர்ரே ஆகியோரை வீழ்த்திய சோங்கா, கடும் சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், 7-வது இடத்தில் உள்ள பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவும் சந்திக்க வாய்ப்புள்ளது.

மகளிர் பிரிவு

மகளிர் பிரிவை பொறுத்தவரையில் நடப்பு சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரையும், காலிறுதியில் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிச்சையும் சந்திக்கவாய்ப்புள்ளது. இவானோவிச்சுடன் இதுவரை 8 முறை மோதியுள்ள செரீனா அதில் 7 முறை வெற்றி கண்டுள்ளார்.

மற்றொரு காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் செக்.குடியரசின் பெட்ரா விட்டோவாவும், 7-வது இடத்தில் உள்ள கனடாவின் யூஜீனி புச்சார்டும் சந்திக்க வாய்ப்புள்ளது. இவர்கள் இருவரும் விம்பிள்டன் இறுதிச்சுற்றில் மோதியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் சைமோனா ஹேலப்பும், 5-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவும் காலிறுதியில் சந்திக்க வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in