Published : 03 Aug 2014 08:00 AM
Last Updated : 03 Aug 2014 08:00 AM

காமன்வெல்த் போட்டி: வெள்ளி வென்ற 2 பேருக்கு தலா ரூ.30 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர்கள் சரத் கமல், அந்தோணி அமல்ராஜ் ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த வீரர்கள் இருவருக்கும் தனித்தனியே சனிக்கிழமை அவர் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் இரட்டையர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் நீங்கள் இந்திய நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ளீர்கள். உங்களின் இந்த உன்னத சாதனைகளுக்காக தமிழக மக்கள் சார்பில் எனது இதயப்பூர்வமான பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கான பரிசுத் தொகையை ரூ.30 லட்சமாக உயர்த்தி 2011-ம் ஆண்டில் நான் அறிவித்ததை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் உங்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கப்பரிசு வழங்கப்படும். உங்களுக்கும் உங்கள் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கும் பாராட்டு தெரிவிப்பதுடன், வரும் காலத்தில் நீங்கள் மேலும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு பாராட்டுக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x