Published : 21 Apr 2018 07:41 AM
Last Updated : 21 Apr 2018 07:41 AM

புத்துயிர் பெறுமா பெங்களூரு?: டெல்லி அணியுடன் இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு, டெல்லி அணிகள் தலா 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டு பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ளன. இரு அணிகளுக்குமே இன்றைய ஆட்டம் தொடரில் மீண்டு வருவதற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வி கண்ட நிலையில் அடுத்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ஆனால் கடைசி இரு ஆட்டங்களிலும் ராஜஸ்தான், மும்பை அணிகளிடம் வீழ்ந்தது. பெங்களூரு அணி பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சொந்த மண்ணில் கடைசியாக நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் 200-க்கும் அதிகமான ரன்களை வாரி வழங்கினர். சுழற்பந்து வீச்சாளர்களான யுவேந்திரா சாஹல், வாஷிங்டன் சுந்தர் கூட்டணியால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலவில்லை.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 57 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்து அதீத பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அந்த ஆட்டத்தில் கோலி மட்டுமே கடைசி வரை போராடினார். மற்ற எந்த ஒரு பேட்ஸ்மேனிடம் இருந்து அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்கும் விஷயத்திலும் அந்த அணி மெனக்கெட வேண்டியதுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணியில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும்.

பிரெண்டன் மெக்கலம், மொயின் அலி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 ஆட்டங்களில் 47 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த மெக்கலம் கடைசி ஆட்டத்தில் தனது இடத்தை இழந்திருந்தார்.

காம்பீர் தலைமையிலான டெல்லி அணி முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட அடுத்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் வீழ்ந்தது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜேசன் ராய் 91 ரன்கள் விளாச வெற்றிப் பாதைக்கு திரும்பிய டெல்லி அணி தனது கடைசி ஆட்டத்தில் கொல்கத்தா அணியிடம் வெற்றியை தாரைவார்த்தது. அனுபம் வாய்ந்த காம்பீர், மட்டையை சுழற்றக்கூடிய மேக்ஸ்வெல், இளம் வீரர்களான ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இணைந்து கூட்டாக திறனை வெளிப்படுத்தாதது பின்னடைவாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x