Published : 10 Aug 2014 11:47 AM
Last Updated : 10 Aug 2014 11:47 AM

பின்கள வீரர்கள் அளவுக்கு பேட்ஸ்மென்கள் ஆடவில்லை: தோனி வருத்தம்

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சற்றும் எதிர்பாராத விதமாக 3ஆம் நாளே இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது குறித்து தோனி வருந்தியுள்ளார்.

”லார்ட்ஸ் டெஸ்ட் மற்றும் இந்தத் தொடரில் பின் கள வீரர்கள், அதாவது 8,9ஆம் நிலைகளில் இறங்கியவர்களின் பேட்டிங் முன்னிலை வீரர்களின் ஆட்டத்தைக் கேள்விக்குட்படுத்தும் விதமாக இருந்தது. 5 பவுலர்களுடன் ஆடும்போது 5வது பவுலர் பேட்டிங்கில் நன்றாக ஆடிவிடுகிறார்.

மேலும் முன்னிலை வீரர்கள் சிலர் ஃபார்மில் இல்லை. டெஸ்ட் போட்டியில் வெல்ல ரன்கள் தேவை. அப்போதுதான் எதிரணியினரின் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியும்.

முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய பேட்டிங் மாறுவேடம் பூண்டது, ஸ்டூவர்ட் பின்னி, மொகமது ஷமி, புவனேஷ் குமார் ரன்கள் எடுத்தனர். ஒரு பேட்ஸ்மென் குறைவாக இருந்தாலும் மற்ற வீரர்கள் பொறுப்பைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் போட்டியில் மட்டும்தான் பின்கள வீரர்கள் ரன் எடுக்கவில்லை. அதனால் ரன்கள் குறைவாகப் போனது.

முன்கள பேட்ஸ்மென்கள் 20-25 ஓவர்களை ஆட வேண்டும். பிறகு பந்து பளபளப்பை இழந்த பிறகு ஷாட்களை ஆடலாம் ஆனால் தேவையில்லாமல் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளுடன் மோதுகின்றனர். அவர்களை ஸ்விங் செய்ய விடாமல் ஆடவேண்டும், அது போன்ற ஆட்டம் எங்களிடம் இல்லை.

மேலும் ஆட்டம் தொடங்கி அரை மணியில் பாதி பேட்ஸ்மென் பெவிலியன் திரும்பியிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது” என்றார்.

ரவீந்திர ஜடேஜா பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த தோனி, “பிரச்சினை என்னவெனில் அவருக்குப் பதிலாக யாரை விளையாட வைப்பது என்பதுதான். மீண்டும் ஒரு பேட்ஸ்மெனை கூடுதலாக எடுத்தால் 5வது பவுலர் இல்லாமல் போகும். ஜடேஜா விளையாட விளையாட சரியாகி விடுவார். அவர் தன்னம்பிக்கையுடன் அவரது பிராண்ட் கிரிக்கெட்டை ஆட வேண்டும். அவர் பந்துகளை தொடர்ந்து அடித்து ஆடுவார் என்றே நம்புகிறேன்.

மொயீன் அலி நன்றாகவே வீசுகிறார். அவரைப்போல் நாம் ஏன் வீச முடியவில்லை என்று கேட்க முடியாது, காரணம் நாம் அவரை சரியாக ஆடவில்லை என்றே கருதுகிறேன். புஜாராவுக்கு கடினமான தீர்ப்பு அளிக்கப்பட்டது, மற்றபடி அவர் நன்றாகவே வீசுகிறார்”

இவ்வாறு கூறினார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x