Published : 02 May 2024 07:05 AM
Last Updated : 02 May 2024 07:05 AM

ராஜீவ்காந்தி மைதானத்தில் இன்று மோதல்: ராஜஸ்தானுக்கு முட்டுக்கட்டை போடுமா ஹைதராபாத்?

கோப்புப்படம்

ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த நிலையில் தனது கடைசி இரு ஆட்டங்களில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளிடம் அடைந்த தோல்வியால் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்த சீசனில் 3 ஆட்டங்களில் தலா 250 ரன்களுக்கு மேல் வேட்டையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 200 ரன்களுக்கு மேலான இலக்கை துரத்திய ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்து 250 மேல் அந்த அணி குவித்த ஆட்டங்களில் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் பெரிய அளவில் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டிருந்தனர். ஆனால் 200 ரன்களுக்கு மேலானஇலக்கை துரத்திய ஆட்டங்களில் இந்த ஜோடி விரைவிலேயே ஆட்டமிழந்துள்ளது. இந்த ஆட்டங்களில் நடுவரிசை பேட்ஸ்மேன்களும் கைகொடுக்காதது அணியை பலவீனமடையச் செய்துள்ளது.

நடுவரிசையில் எய்டன் மார்க்ரமிடம் இருந்து இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல்திறன் வெளிப்படவில்லை. அதேவேளையில் கடந்த சில ஆட்டங்களாக ஹென்ரிச் கிளாசன், நித்திஷ் ரெட்டி, அப்துல் சமத் ஆகியோரிடம் இருந்து எதிர்பார்த்த அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்றால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது பேட்டிங்கை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டக்கூடும்.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 9 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, ஒரு தோல்வியுடன் 16 புள்ளிகள் குவித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் நிலையில் உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் எனஅனைத்து துறையிலும் ராஜஸ்தான் அணி சிறந்து விளங்குகிறது.

பேட்டிங்கில் டாப் ஆர்டர் விரைவிலேயே ஆட்டம் இழந்தால் நடுவரிசையில் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் ஆட்டத்தை அற்புதமாக முன்னெடுத்துச் செல்பவர்களாக திகழ்கின்றனர்.

துருவ் ஜூரெலும் பார்முக்கு திரும்பி இருப்பது அணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. அவர்,லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 52 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் சுழலில் யுவேந்திர சாஹல் அனுபவம் வாய்ந்த வீரராக சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறார். டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா ஆகியோர் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்த்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x