ரங்கனா ஹெராத் அபாரம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை

ரங்கனா ஹெராத் அபாரம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை
Updated on
1 min read

கால்லேயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாளான இன்று சற்றும் எதிர்பார்க்க முடியாத வகையில் பாகிஸ்தானை இலங்கை வெற்றி பெற்றது.

இலங்கையின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பாகிஸ்தான் தன் 2வது இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இன்று 21 ஓவர்கள் மீதமிருந்தது. அதில் இலங்கை 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை தோன்றியது. இலங்கை 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

இலங்கை வெற்றி ரன்களை எடுத்து முடித்தவுடன் கனமழை கொட்டத் தொடங்கியது. பாகிஸ்தானுக்கு இயற்கை அனுகூலமும் இல்லாமல் போய் விட்டது.

நேற்றைய ஆட்ட முடிவில் 4 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது பாகிஸ்தான். இதனையடுத்து ஆட்டம் நிச்சயம் டிராவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இலங்கை கேப்டன் ஆஞ்சேலோ மேத்யூஸ் வேறு முடிவெடுத்தார். இரவுக்காவலனாக களமிறங்கிய சயீத் அஜ்மல் 4 ரன்களில் தம்மிக பிரசாத்திடம் அவுட் ஆகி சரிவைத் தொடங்கி வைத்தார். அடுத்து அகம்ட் ஷேஜாத் பெரெராவிடம் எல்.பி.ஆக, முதல் இன்னிங்ஸ் சத நாயகன் யூனிஸ் கான் 13 ரன்களில் ஹெராத்திடம் பவுல்டு ஆக பாகிஸ்தான் 55/4 என்று சரிவு கண்டது.

அதன் பிறகு அசார் அலி, மிஸ்பா இணைந்து ஸ்கோரை 111 ரன்களுக்கு உயர்த்திய போது அசர் அலியும் ஹெராத்திடம் அவுட் ஆனார். அடுத்த ஓவர் முதல் பந்தில் மிஸ்பா 28 ரன்களுக்கு பெரேராவிடம் எல்.பி. ஆனார்.

அடுத்தடுத்து ஆசாத் ஷபிக், அப்துர் ரஹ்மான், மொகமத் தால்ஹா என்று விக்கெட்டுகள் சரிய, விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமட் ஒரு முனையில் 52 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஜுனைத் கானை ஹெராத் வீழ்த்தினார்.

ஹெராத் 30.2 ஓவர்களில் 11 மைடன்களுடன் 48 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து இலங்கைக்கு வெற்றி இலக்கு 99 ரன்கள் ஆனது. கையிலிருக்கும் ஓவர்கள் 21 மட்டுமே. ஆனால் இலங்கை அதிரடி ஆட்டம் ஆடி 16.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. ஜெயவர்தனே 26 ரன்களையும், மேத்யூஸ் அதிரடி 25 ரன்களையும் எடுத்தனர். ஜுனைத் கான் ஓவர் சாத்தி எடுக்கப்பட்டது. 8 ஓவர்களில் அவர் 55 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஹெராத் ஆட்ட நாயகன் விருதைப்பெற்றார். இலங்கை 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in