Published : 01 May 2024 07:17 AM
Last Updated : 01 May 2024 07:17 AM

டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியாவுக்கு இடம்

இந்திய அணி வீரர்கள்

மும்பை: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கே.எல்.ராகுல் சேர்க்கப்படவில்லை. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ளனர்.

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும்மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனியர் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியும் இடம் பெற்றுள்ளார். தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்பி உள்ளார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேவேளையில் கே.எல்.ராகுலுக்கு இடம் வழங்கப்படவில்லை. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இந்த சீசனில் கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, டி20 உலகக் கோப்பை தொடருக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஷிவம் துபேவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ்,யுவேந்திர சாஹல் ஆகிய 4 பேர் இடம் பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரீத் பும்ராவுடன் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான் ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்விஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்.

தென் ஆப்பிரிக்க அணியில் இரு புதுமுகங்கள்: ஐசிசி டி20 கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எய்டன் மார்க்ரம் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். எஸ்ஏ20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரியான் ரிக்கெல்டன், வேகப்பந்து வீச்சாளர் ஓட்னியல் பார்ட்மேன் ஆகிய புதுமுகங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எஸ்ஏ20 தொடரில் ரியான் ரிக்கெல்டன் 58.88 சராசரியுடன் 530 ரன்களை குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார். அதேவேளையில் ஓட்னியல் பார்ட்மேன் 18 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

பேட்டிங்கில் அனுபவம் வாய்ந்த குயிண்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிக் கிளாசன், டேவிட் மில்லர் ஆகியோருடன் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் இடம் பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சில் காகிசோ ரபாடாவுடன், அன்ரிச் நோர்க்கியா அணிக்கு திரும்பி உள்ளார். நோர்க்கியா கடந்த 2023-ம் செப்டம்பர் மாதம் முதுகுவலி காரணமாக அணியில் இருந்து விலகியிருந்தார். தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர், 9 மாதங்களுக்குப் பிறகு தேசிய அணிக்கு திரும்பி உள்ளார்.

இவர்களுடன் மார்கோ யான்சன், ஜெரால்டு கோட்ஸி ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளர்களாக அணியில் உள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளர்களாக ஜோர்ன் ஃபோர்டுயின், கேஷவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி ஆகிய 3 பேர் இடம் பெற்றுள்ளனர். மாற்று வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர்களான நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணி விவரம்: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஓட்னியல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ஜோர்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ யான்சன், ஹென்ரிச் கிளாசன், கேஷவ் மகாராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நோர்க்கியா, காகிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

மாற்று வீரர்கள்: நந்த்ரே பர்கர், லுங்கி நிகி.

இங்கிலாந்து அணியில் மீண்டும் ஜோப்ரா ஆர்ச்சர்: டி20 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் சுமார் ஒரு வருடத்துக்கு பின்னர் அணிக்கு திரும்பி உள்ளார். ஆல்ரவுண்டரான டாம் ஹார்ட்லிக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஜோப்ரா ஆர்ச்சர் கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற டி 20 தொடரில் விளையாடினார். 3 ஆட்டங்கள் கொண்டஅந்த தொடரில் 29 வயதான ஆர்ச்சர் 4 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். இதன் பின்னர் வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.

தற்போது அவர், காயத்தில் இருந்து முழு உடற்தகுதியை எட்டியதை தொடர்ந்து அணிக்கு தேர்வாகி உள்ளார். ஜாஸ் பட்லர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் இங்கிலாந்து கடந்த 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 24 வயதான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான டாம் ஹார்ட்லி அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 82 டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 68 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து அணி மே 31-ம் தேதி மேற்கு இந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டுச் செல்கிறது. அங்கு தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியானது ஜூன் 4-ம் தேதி ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பார்படாஸில் நடைபெறுகிறது.

அணி விவரம்: ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சேம் கரண், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜேக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வுட்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x