

சென்னை: பேட்ச் ஓபன் சாலஞ்சர் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீரர் வேலவன் செந்தில் குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், பிரான்ஸின் மெல்வில் சியானிமானிகோவை எதிர்த்து விளையாடினார். 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகத் தரவசையில் 58-வது இடத்தில் உள்ள வேலவன் செந்தில்குமார் 11-6,11-9,11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
தொழில்முறை ஸ்குவாஷ் சங்க சுற்றுப்பயணத்தில் வேலவன் செந்தில்குமார் கைப்பற்றும் 8-வது சாம்பியன் பட்டம் இதுவாகும். சென்னையை சேர்ந்த வேலவன் செந்தில்குமார் கூறும்போது, “மெல்வில் மிகவும் சிறப்பாக விளையாடினார், அவருக்கு நிறைய ரசிகர்களின் ஆதரவு இருந்தது. இருப்பினும் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை உறுதியாக விளையாடினேன். பட்டம் வென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.