

செங்டு: தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய ஆடவர் அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய ஆடவர் அணி தனது முதல் ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. இந்நிலையில் நேற்று 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியது இந்திய அணி.
இதில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்தின் ஹாரி ஹுவாங்கை தோற்கடித்தார்.
இதையடுத்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-17, 19-21, 21-15 என்ற செட் கணக்கில் பென் லேன், சீயன் வென்டி ஜோடியை வென்றது. இதன் பின்னர் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-16, 21-11 என்ற செட் கணக்கில் நதீம் தல்வியை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தியது.
முழுமையான வெற்றி: தொடர்ந்து இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன், துருவ் கபிலா ஜோடி 21-17, 21-19 என்ற நேர் செட் கணக்கில் ரோரி ஈஸ்டன், அலெக்ஸ் கிரீன் ஜோடியையும் கடைசியாக நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கிரண் ஜார்ஜ் 21-18, 21-12 என்ற செட் கணக்கில் சோழன் கயானையும் வீழ்த்தினர். முடிவில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.