Published : 01 Aug 2014 10:00 AM
Last Updated : 01 Aug 2014 10:00 AM

காமன்வெல்த்: குத்துச்சண்டை - இந்தியாவுக்கு 5 வெண்கலம் உறுதி

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் சிங், லைஷ்ராம் சரிதா தேவி, பிங்கி ராணி, தேவேந்திரோ சிங், மன்தீப் ஜங்ரா ஆகிய 5 பேரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதனால் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 5 வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.

2008 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவரான விஜேந்தர் சிங், தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 75 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது காலிறுதியில் 3-0 என்ற கணக்கில் டிரினிடாட் அண்ட் டொபாக்கோவின் ஆரோன் பிரின்ஸை அதிரடியாக வீழ்த்தினார்.

இந்தப் போட்டியின் முதல் சுற்று கொஞ்சம் கடினமானதாக அமைந்தது. இதில் விஜேந்தர் சிங் தடுப்பாட்டத்தைக் கையாள, ஆரோன் பிரின்ஸ் தாக்குதல் ஆட்டத்தில் இறங்கினார். ஆனாலும் பிரின்ஸுக்கு பலன் கிடைக்கவில்லை. முதல் சுற்றைக் கைப்பற்றிய விஜேந்தர், அடுத்த சுற்றில் தாக்குதல் ஆட்டத்தில் இறங்க, பிரின்ஸ் நிலைகுலைந்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய விஜேந்தர் சிங், 3-வது சுற்றை எளிதாகக் கைப்பற்றி, இறுதியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி கண்டார்.

ஆட்ட உத்தியில் மாற்றம்

வெற்றி பெற்ற பிறகு பேசிய விஜேந்தர் சிங், “ஆரம்பத்தில் தடுப்பாட்டத்தைக் கையாண்டேன். பின்னர் எனது ஆட்ட உத்தியை மாற்றிக் கொண்டு ஆக்ரோஷமாக ஆடினேன். இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டேன். எதிராளி பிரின்ஸும் கடும் சவால் அளிக்கக்கூடிய வீரர். ஒருபோதும் அவரை குறைத்து மதிப்பிட்டதில்லை. அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் நானும் ஆபத்தான சூழலில் இருந்ததாக நினைக்கவில்லை” என்றார்.

தங்கம் வெல்வேன்

அரையிறுதி குறித்து விஜேந்தரிடம் கேட்டபோது, “எந்தவொரு போட்டியிலும் அரையிறுதியை எட்டிவிட்டால், முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட வேண்டும். இறுதிச்சுற்றில் விளையாடுவதற்கு தகுதிபெறும் வகையில் அரையிறுதிப் போட்டிக்கு தயாராக வேண்டும். நான் அரையிறுதியில் நைஜீரியாவின் கானர் கோயலை சந்திக்கிறேன். அரையிறுதி நிச்சயம் எனக்கு சவாலாக இருக்கும். ஆனால் நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வேன் என நம்புகிறேன்” என்றார்.

அரையிறுதியில் சரிதா

மகளிர் 57-60 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை காலிறுதியில் இந்தியாவின் லைஷ்ராம் சரிதா தேவி, 3-1 என்ற கணக்கில் வேல்ஸிலின் சார்லேன் ஜோன்ஸை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் மொஸம்பிக்கின் மரியா மசோன்குவாவை சந்திக்கிறார் சரிதா தேவி.

மகளிர் 51 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை காலிறுதியில் இந்தியாவின் பிங்கி ராணி 3-0 என்ற கணக்கில் பப்புவா மற்றும் நியூகினியாவின் ஜேக்குலின் வேங்கியை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தார். பிங்கி, காமன்வெல்த் போட்டிக்கான தகுதிச்சுற்றில் 5 முறை உலக சாம்பியன் ஆனவரும், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான மேரி கோமை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. பிங்கி தனது அரையிறுதியில் வடக்கு அயர்லாந்தின் மைக்கேலா வால்ஷை சந்திக்கிறார்.

தேவேந்திரோ சிங்

இதேபோல் 49 கிலோ குத்துச்சண்டை காலிறுதியில் இந்தியாவின் தேவேந்திரோ சிங், 3-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் அகில் அஹமதுவை தோற்கடித்தார். இன்று நடைபெறும் அரையிறுதியில் வேல்ஸின் ஆஸ்லே வில்லியம்ஸை சந்திக்கிறார் தேவேந்திரோ சிங்.

ஆடவர் 69 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை காலிறுதியில் மன்தீப் ஜங்ராவை எதிர்த்துவிளையாடவிருந்த ஆஸ்திரேலியாவின் டேனியல் லீவிஸுக்கு மருத்துவர்உடற்தகுதி சான்று அளிக்காததால், ஜங்ரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடியபோது லீவிஸின் கண்ணில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் 91 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அம்ரித்பிரீத் சிங் 0-3 என்ற கணக்கில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x