Published : 26 Apr 2018 12:41 PM
Last Updated : 26 Apr 2018 12:41 PM

‘நாங்க மூச்சு விட்ற சத்தமே இங்க உறுமல்தான்’: சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் மிரட்டல் ட்வீட்

 பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் மிரட்டலாக ட்வீட் செய்துள்ளார்.

பெங்களூரு நகரில் ஐபிஎல் போட்டியில் 24-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய அம்பதி ராயுடு 52 பந்துகளில் 82 ரன்களும், கேப்டன் தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

போட்டியின் இறுதியில் கேப்டன் தோனி வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்தவுடன், மைதானத்தில் முதல் ஆளாக ஓடிவந்து, தோனியைக் கட்டித்தழுவி பாராட்டியவர் ஹர்பஜன்சிங். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் தமிழில் மிரட்டலான ட்வீட் பதிவிட்டுள்ளார்.

 

அதில் “ வாடிவாசல் திறந்தவங்ககிட்டயே வரிஞ்சுக்கட்டறதா

யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது…

மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல்தான் ”

என்று தமிழில் ஹர்பஜன் ட்வீட் செய்து பின்னர் கன்னடத்திலும் ட்வீட் செய்துள்ளார்.

கடைசியில் “நீ நொறுக்கு பங்கு.. தோனி, ராயுடு” என இருவரையும் குறிப்பிட்டுள்ளார். #அன்பின் அடையாளம் என்று ஹேஷ்டேக் பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டதில் இருந்து தமிழில் அவ்வப்போது ட்வீட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிகுறித்து பதிவிட்ட ஹர்பஜன் சிங், “சிஎஸ்கே-வை வீழ்த்திவிடலாம் என நினைத்தாயோ. சூதுவாது தெரியாம சென்னை ஐபிஎல் ச்சலம் பலா. இங்கே ஃபேமஸ் தம் பிரியாணி சாப்பிட வரல, தம் பிடிச்சு விளையாட வந்தோம். சாலா பாஹ உந்தி, சாஹர் சிரக தீஸ்தாவுறா.. ஓப்பனிங்கலயே இறக்குவோம் ராயுடுவ… பவுலர்க்கு எல்லாம் டெரர் ஆய்டும் அருமை சன் ரைசர்ஸ்” என பதிவிட்டு இருந்தார்.

புனேயில் நடந்த போட்டியைக் காண ’விசில் போடு’ எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையில் இருந்து சிஎஸ்கே ரசிகர்கள் சென்றனர். அதுகுறித்து ஹர்பஜன் பதிவிடுகையில்,

“பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை, அமெரிக்காவுல போய் நீங்க மேட்ச் நடத்தினாலும், விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேறும் என் தமிழினம்..உங்கள் அன்புக்கு நான் அடிமை. நீங்க வேற லெவல் மாஸ் யா சென்னை… அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x