

கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 153 ரன்களை சேர்த்தது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்கை தேர்வு செய்ய, ஓப்பனர்களாக ஜேக் ப்ரேசர் மெக்கர்க் - பிருத்வி ஷா களம் புகுந்தனர். 2ஆவது ஓவரில் பிருத்வி ஷா 13 ரன்களுக்கு அவுட். கடந்த மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 84 ரன்களை குவித்து மிரட்டிய ஜேக் ப்ரேசர் 3ஆவது ஓவரில் 12 ரன்களில் சுருண்டார்.
அதற்கு அடுத்த ஓவரில் ஷாய் ஹோப் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நல்லவேளை அதற்கு அடுத்த ஓவரில் அவுட்டாகாமல் சமாளித்துவிட்டனர். 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களைச் சேர்த்தது டெல்லி.
7ஆவது ஓவரில் அபிஷேக் போரல் 18 ரன்களுக்கு போல்டானார். அதன்பிறகு அக்சர் படேல் - ரிஷப் பந்த் இணைந்து சமாளிப்பார்கள் என ரசிகர்கள் நினைத்தனர். ஒரு சிக்சர் விளாசி 27 ரன்களைச் சேர்த்து நம்பிக்கை கொடுத்த பந்த் அவுட்டானதும் அக்சர் படேல் தனித்துவிடப்பட்டார்.
அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 ரன்களில் கிளம்ப மீண்டும் அக்சர் தனியே நின்றார். 15 ரன்களைச் சேர்த்த பின் அவரும் களத்திலிருந்து அவுட்டாகி கிளம்பிச் சென்றுவிட்டார். குமார் குஷாக்ரா 1 ரன்னில் அவுட்டாகி எல்லோரும் வந்து மைதானத்தை பார்த்து கிளம்பி செல்வது போல இருந்தது.
15 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை தாரைவார்த்தது டெல்லி. குல்தீப் யாதவ் தாக்குபிடித்து ஆடினார். ஆனால் அவருடன் இருந்த ராசிக் தார் சலாம் 8 ரன்களில் விக்கெட்டானார். குல்தீப் யாதவ் மட்டும் 35 ரன்களைச் சேர்க்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 153 ரன்களைச் சேர்த்தது.
கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ஹர்சித் ராணா, வைபவ் அரோரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சுனில் நரைன், மிட்ஷெல் ஸ்டார்க் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.