Published : 29 Apr 2024 07:02 AM
Last Updated : 29 Apr 2024 07:02 AM

ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் டெல்லி கேபிடல்ஸ்: கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் இன்று மோதல்

கொல்கத்தா: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில்இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெறும் பட்சத்தில் ஹாட்ரிக் வெற்றியுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில்உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் எஞ்சியுள்ள 4 ஆட்டங்களிலும் கணிசமான வெற்றிகளை பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. டெல்லி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் 200 ரன்களுக்கு மேல் வேட்டையாடி வெற்றி கண்டிருந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 224 ரன்களையும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 257 ரன்களையும் குவித்து மிரட்டியிருந்தது டெல்லி கேபிடல்ஸ்.

இதில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பந்த் 43 பந்துகளில் 88 ரன்கள் விளாசியிருந்தார். அதேவேளையில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜேக் ப்ரேசர் மெக்கர்க் 27 பந்துகளில், 84 ரன்களை குவித்து மிரட்டியிருந்தார். 22 வயதான ஜேக் ப்ரேசர் மெக்கர்க் பேட்டிங்கில் கை, கண் ஒருங்கிணைப்பு அற்புதமாக உள்ளது. உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா வீசிய பந்தை ஜேக் ப்ரேசர் சிக்ஸர் விளாசிய விதம் பாராட்டும் வகையில் இருந்தது.

பும்ரா வீசிய முதல் பந்தில் இதுவரை பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் விளாசியது இல்லை. இதனால் ஜேக் ப்ரேசர் விளாசிய சிக்ஸர் கவனம் பெற்றது.ஸ்டிரைக் ரேட் 237.50 வைத்துள்ள அவரிடம் இருந்து இன்றைய ஆட்டத்திலும் சிறந்த மட்டைவீச்சு வெளிப்படக்கூடும். அபிஷேக் போரல், ஷாய் ஹோப், டிரிஸ்டன்ஸ்டப்ஸ், அக்சர் படேல் ஆகியோரும் அதிரடியாக விளையாடக்கூடியவர்களாக திகழ்வது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பலம் சேர்க்கிறது. இந்த பேட்டிங் வரிசை இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சுதுறைக்கு சவால் அளிக்கக்கூடும்.

10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 3 தோல்விகளை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது. கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 261 ரன்களை குவித்த போதிலும் பலம் இல்லாத பந்து வீச்சால் தோல்வியை சந்தித்தது. பேட்டிங்கை பொறுத்தவரையில் டாப் ஆர்டரில் பில் சால்ட், சுனில் நரேன் பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர்.

கடந்த ஆட்டத்தில் 10 பந்துகளில் 28 ரன்கள் விளாசிய ஸ்ரேயஸ் ஐயரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். ஆந்த்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிகரிக்கும். பந்து வீச்சை பொறுத்தவரையில் கொல்கத்தா அணி முன்னேற்றம் காண்பது அவசியம். சுனில் நரேன் மட்டுமே ரன்குவிப்பை கட்டுப்படுத்துபவராக இருக்கிறார். அவரை தவிர மற்ற அனைத்து பந்து வீச்சாளர்களும் சீரான திறனை வெளிப்படுத்துவது இல்லை.

கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த மிட்செல் ஸ்டார்க்குக்கு பதிலாக களமிறக்கப்பட்ட துஷ்மந்தா சமீரா ஓவருக்கு சராசரியாக 16 ரன்களை விட்டுக்கொடுத்தது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்சித் ராணா 61 ரன்களை தாரைவார்த்திருந்தார். அந்த ஆட்டத்தில் 7 பந்து வீச்சாளர்களை பயன்படுத்திய போதிலும் கொல்கத்தா அணியால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாமல் போனது. அநேகமாக இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் மாற்றங்கள் இருக்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x