Published : 28 Apr 2024 04:36 AM
Last Updated : 28 Apr 2024 04:36 AM

டெல்லியிடம் போராடி வீழ்ந்தது மும்பை @ ஐபிஎல்

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் போராடி தோல்வி அடைந்தது.

டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்கள் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் அதிகபட்ச ரன்குவிப்பாக இது அமைந்தது. தொடக்க வீரரான ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் 27 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய அபிஷேக் போரல் 27 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்தார்.

ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் 15 பந்துகளில் அரை சதத்தை விளாச பவர்பிளேவில் டெல்லி அணி 92 ரன்கள் குவித்தது. இந்த தொடரில் ஜேக் ஃபரேசர் மெக்கர்க் 15 பந்துகளில் அரை சதம் அடிப்பது இது 2-வது முறையாகும். முதல் விக்கெட்டுக்கு ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க், அபிஷேக் போரல் ஜோடி 7.4 ஓவர்களில் 114 ரன்களை வேட்டையாடியது. இதன் பின்னர் களமிறங்கிய ஷாய் ஹோப் 17 பந்துகளில், 5 சிக்ஸர்களுடன் 41 ரன்களும், கேப்டன் ரிஷப் பந்த் 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்களும் விளாசி வெளியேறினர்.

இறுதிக்கட்ட ஓவர்களில் மட்டையை சுழற்றிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 48 ரன்களும், அக்சர் படேல் 11 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணியின் பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, பியூஷ் சாவ்லா ஆகியோர் மட்டுமே குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்தனர். இவர்கள் தலா 4 ஓவர்களை வீசி முறையே 35 மற்றும் 36 ரன்களை வழங்கியிருந்தனர். அதிகபட்சமாக லூக் வுட் 68 ரன்களையும், நுவன் துஷாரா 56 ரன்களையும் தாரை வார்த்தனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய 2 ஓவர்களில் 41 ரன்கள் வேட்டையாடப்பட்டன.

258 ரன்கள் இலக்குடன் பேட்செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். ரோஹித்சர்மா 8, இஷான் கிஷன் 20, சூர்யகுமார் யாதவ் 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். 6 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 65 ரன்கள்என்ற நிலையில் திலக் வர்மா,ஹர்திக் பாண்டியா ஜோடி தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டது. இதனால் அணியின் ரன் விகிதம் சீராக உயர்ந்தது. ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் ரஷிக் சலாம் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய நேஹல் வதேரா 4 ரன்னில் நடையை கட்டினார். இதன் பின்னர் களமிறங்கிய டிம் டேவிட், திலக் வர்மாவுடன் இணைந்து மட்டையை சுழற்றினார். மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 64 ரன்கள் தேவையாக இருந்தன. முகேஷ் குமார் வீசிய 18-வது ஓவரில் முதல் 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசிய டிம் டேவிட் 4-வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 17 பந்துகளில், 37 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து அந்த ஓவரின் கடைசி பந்தில் திலக் வர்மா சிக்ஸர் விளாச ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது.

2 ஓவர்களில் 41 ரன்கள் தேவை என்ற நிலையில் ரஷிக் சலாம் வீசிய அந்த ஓவரில் 2-வது பந்தில் சிக்ஸர் விளாசிய முகமது நபி அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய பியூஷ் சாவ்லா சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசினார். கடைசி பந்தில் திலக் வர்மா போராடி 3 ரன்கள் சேர்க்க ஒரு வழியாக இந்த ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டன. கடைசி ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவையாக இருந்து. முகேஷ் குமார் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் சேர்க்கும் முயற்சியில் திலக் வர்மா ரன் அவுட் ஆனார்.

32 பந்துகளை சந்தித்த திலக் வர்மா 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் விளாசினார். இதன் பின்னர் மும்பை அணியின் நம்பிக்கை தளர்ந்தது. அடுத்த 3 பந்துகளில் 13 ரன்கள் சேர்க்கப்பட கடைசி பந்தில் பியூஷ் சாவ்லா (10) அவுட் ஆனார். லூக் வுட் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. டெல்லி அணி தரப்பில் ரஷிக் சலாம், முகேஷ் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், கலீல் அகமது 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் தேர்வானார். 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது 6-வது தோல்வியாக அமைந்தது. 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை இந்தியன்ஸ் 3 வெற்றி, 6 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x