

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட்டில் அலிஸ்டர் குக்கை ஸ்டம்ப்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்த தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங்குகள் செய்த உலக சாதனைக்குரியவரானார்.
அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் தோனியே இப்போது ஸ்டம்பிங்குகளுக்கான சாதனையாளராகத் திகழ்கிறார்.
சங்கக்காரா 129 ஸ்டம்பிங் செய்து வைத்திருந்த சாதனையை தோனி இன்று முறியடித்தார். மேலும் ஜோ ரூட் விக்கெட்டையும் ஸ்டம்பிங்கில் வீழ்த்திய வகையில் தோனி தற்போது 131 ஸ்டம்பிங்குகளுடன் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இலங்கையின் மற்றொரு விக்கெட் கீப்பரான ரோமேஷ் கலுவிதரனா 101 ஸ்டம்பிங்குகளுடன் அடுத்த இடத்திலும் பாகிஸ்தானின் மொயின் கான் 93 ஸ்டம்பிங்குடன் அதற்கு அடுத்த இடத்திலும் ஆடம் கில்கிறிஸ்ட் 92 ஸ்டம்பிங்குகளுடன் அதற்கு அடுத்த இடத்திலும் உள்ளனர்.
ஏற்கனவே தோனி 2007ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டி ஒன்றில் 6 பேர் அவுட் ஆகக் காரணமாக இருந்தார். இதில் அவர் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ரிட்லி ஜேகப்ஸ் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 494 கேட்ச்களைப் பிடித்து 5வது இடத்தில் உள்ளார். மொத்தமாக 625 பேரை அவுட் செய்து 5வது இடத்தில் உள்ளார் தோனி.