

மே.இ.தீவுகளில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறவிருக்கிறது. இதற்கான தனது 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியைத் தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர். இதில் கோலி, ஹர்திக் பாண்டியாவுக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
விரேந்திர சேவாகும் இர்பான் பதானும் கூட தங்களது டி20 உலகக் கோப்பை அணிகளைத் தேர்வு செய்துள்ளனர். எனினும் சஞ்சய் மஞ்சுரேக்கர் அணியில் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் என 3 விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். அதேநேரம், சஞ்சய் மஞ்சுரேக்கர் கோலியை எடுக்காமல் ரோஹித் சர்மாவை தன் அணியில் கேப்டனாகத் தேர்வு செய்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரோஹித்தின் ஓப்பனிங் பார்ட்னர்.
இவர்களுக்குப் பிறகு சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், பிறகு குருணால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றுள்ளனர். எனினும், குருணால் சகோதரர் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவை சஞ்சய் மஞ்சுரேக்கர் தேர்வு செய்யவில்லை. ஸ்பின்னர்களாக குல்தீப் யாதவ், சஹால் கூட்டணியை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளார். இவர்கள் தவிர, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், எந்த அடிப்படையில் இரண்டு தண்ட வீரர்களான ஜடேஜா, குருணால் பாண்டியாவைத் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. அபிஷேக் சர்மா, ஷஷாங்க் சிங், ரியான் பராக், சாய் சுதர்சன், ருதுராஜ் என்று யாருக்கும் இடமில்லாமல் ஒரு அணியைத் தேர்வு செய்துள்ளார். அதுவும் இவர் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக இருப்பவர்.
இவருக்கே மற்ற வீரர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் எங்கோ இருக்கும் செலக்டர்களுக்கு எப்படி தெரியப்போகிறது?.
சஞ்சய் மஞ்சுரேக்கரின் உலகக் கோப்பை டி20 அணி வருமாறு: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், ஜடேஜா, குல்தீப் யாதவ், சஹால், பும்ரா, சிராஜ், ஆவேஷ் கான், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ், குருணால் பாண்டியா.