

காத்மாண்டு: நேபாளம் வந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் உடமைகள் டெம்போ வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் 'ஏ' கிரிக்கெட் அணி ஏப்ரல் 27-ம் தேதி கிர்திபூரில் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக நேபாளம் வந்துள்ளது. நேபாள சீனியர் ஆண்கள் அணிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெறும் சர்வதேச தொடர் இது என்பதோடு, வரலாற்றில் முதல்முறையாக மேற்கிந்திய தீவுகள் அணி முதல்முறையாக நேபாளம் சென்றுள்ளது.
இந்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இந்த தொடர் நடக்கவுள்ளது. இதற்காக மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் நேபாள தலைநகர் காத்மாண்டு விமான நிலையம் வந்தனர். வழக்கமாக ஒரு நாட்டுக்கு மற்றொரு நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வரும்போது சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன், அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்துகொடுக்கப்படும்.
ஆனால், நேபாளம் வந்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் உடமைகள் டெம்போ வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. சாதாரண டெம்போவோல் வீரர்களின் கிட் பேக்குகள் மற்றும் சூட்கேஸ்களை ஒன்றன் மேல் ஒன்றாகக் குவித்துக்கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் வீடியோக்கள் வெளியாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
வீரர்களின் உடமைகள் டெம்போ வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் விவாதமாக மாறியுள்ளது. ஒரு தரப்பினர், நேபாளத்தின் வரவேற்பை விமர்சித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினரோ, டெம்போவில் சாமான்களை ஏற்றிச் சென்றதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பி நேபாளத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.