Published : 24 Apr 2024 07:07 AM
Last Updated : 24 Apr 2024 07:07 AM

டேபிள் டென்னிஸ் தரவரிசை: இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையானார் ஸ்ரீஜா அகுலா

ஸ்ரீஜா அகுலா

புதுடெல்லி: சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காமன்வெல்த் விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா ஓர் இடம் முன்னேறி 38-வது இடத்தை பிடித்துள்ளார்.

இதன் மூலம் அவர், இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். ஏனெனில் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்ந்த மணிகா பத்ரா 2 இடங்களை இழந்து 39-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

25 வயதான ஸ்ரீஜா அகுலா, இந்த ஆண்டில் சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நடைபெற்ற டபிள்யூடிடி பீடர் கார்பஸ் கிறிஸ்டி தொடர், டபிள்யூடிடி பீடர் பெய்ரூட் தொடர் ஆகியவற்றில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தொடர்ந்து கோவாவில் நடைபெற்ற டபிள்யூடிடி ஸ்டார் கண்டென்டர் தொடரில் கால் இறுதி சுற்றுவரை முன்னேற்றம் கண்டிருந்தார்.

ஸ்ரீஜா அகுலா கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் நட்சத்திர வீரரான சரத் கமலுடன் இணைந்து விளையாடி தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டேபிள் டென்னிஸ் தரவரிசையில் மற்ற இந்திய வீராங்கனைகளான யஷஸ்வினி கோர்படே 99-வது இடத்தையும், அர்ச்சனா காமத் 100-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆடவருக்கான தரவரிசையில் இந்தியாவின் சரத் கமல் 37-வது இடத்தில் தொடர்கிறார். இதன் மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் என்ற பெருமையை அவர், தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஜி.சத்தியன் 60-வது இடத்தையும், மனவ் தாகர் 61-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஹர்மீத் தேசாய் 64-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அணிகள் பிரிவில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது. அதேவேளையில் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு மே 16-ம் தேதிக்குள் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டு இடங்களை தரவரிசையின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x