

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தினார். மறுபுறம் ஷிவம் துபே 7 சிக்சர்களை விளாசினார்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனராக களம்கண்ட அஜிங்க்யா ரஹானே, மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரில் 1 ரன்னுக்கு அவுட்டாகி கிளம்பினார். ரஹானே நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி மொத்தம் 120 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அடுத்து களத்துக்கு வந்த டேரில் மிட்செல் 11 ரன்களில் விக்கெட்டானார்.
மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் ஒற்றை ஆளாக நின்று, பொறுப்பான ஆட்டத்துடன் அணிக்கான ரன்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார். 28 பந்துகளில் அவர் அரைசதம் கடந்தார். 3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து வந்த ஷிவம் துபே, ருதுராஜுடன் இணைந்து சிக்சர்களை விளாசி ரன்களை சேர்க்கும் முயற்சியில் இறங்கியது ரசிகர்களுக்கு உற்சாகம். 7 சிக்சர்கள் விளாசி வான வேடிக்கை காட்டிய துபே கடைசி ஓவரில் 66 ரன்களுக்கு ரன்அவுட். இறுதி ஓவரில் களம்புகுந்த தோனி பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 210 ரன்களைச் சேர்த்தது.
60 பந்துகளில் 108 ரன்களுடன் ருதுராஜும், 4 ரன்களுடன் தோனியும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். லக்னோ அணி தரப்பில் மேட் ஹென்றி, மோஷின்கான், யாஷ் தாக்குர், ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.