Published : 20 Apr 2018 08:12 AM
Last Updated : 20 Apr 2018 08:12 AM

பீல்டர்கள் பார்வையாளர்களாக, பார்வையாளர்கள் பீல்டர்களாயினர்: ஆர்ப்பாட்டமற்ற கெய்ல் அதிரடி சதத்தில் கிங்ஸ் லெவன் பிரமாத வெற்றி

மொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 16வது போட்டியில் கிறிஸ் கெய்ல் தனது 6வது ஐபிஎல் அதிரடி சதத்தை எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் சன் ரைசர்ஸ் அணி 15 ரன்களில் முதல் தோல்வியைச் சந்தித்தது.

இந்த ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் கெய்ல் 1 பவுண்டரி 11 சிக்சர்களுடன் 63 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தாலும் கிங்ஸ் லெவன் அணி 200 ரன்களை எட்டாமல் 193/3 என்று முடிந்தது. தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 178/4 என்று நெருக்கமாக வந்தது போல் தோன்றினாலும் 15-16 ஓவர்களிலேயே தோல்வியை நோக்கியே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று சிஎஸ்கேயை புரட்டி எடுத்த கிறிஸ் கெய்ல் இன்று இந்தத் தொடரின் சிறந்தப் பந்து வீச்சு கொண்ட சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சற்றே ஒளிந்து ஆடி பிறகு சீறி எழுந்தார். புவனேஷ்வர் குமாரை ஒன்றும் செய்ய முடியவில்லை, அவர் ஓவர்களைக் கடந்து வந்து சிறந்த டி20 பவுலரான ஆப்கானின் ரிஸ்ட் ஸ்பின்னர் ரஷீத் கானை முதல் முறையாக விளாசு விளாசென்ரு விளாசினார். அவரது பந்துவீச்சில் மட்டும் 16 பந்துகளில் 42 ரன்களை 6 சிக்சர்களுடன் விளாசினார் கிறிஸ் கெய்ல். ஆனாலும் கடைசி ஓவரை கெய்லுக்கு வீச ரஷீத் கானுக்கு அசாத்திய தைரியம் வேண்டும், அந்த ஓவரில்தான் கெய்லுக்கு வீச வேண்டிய லெந்தையே கண்டுபிடித்துக் கொண்டார் ரஷீத் ஆனால் அதற்குள் அங்கு சேதம் விளைவிக்கப்பட்டு விட்டது.

அதிர்ஷ்டம் இல்லாத ரஷீத்; கெய்ல் சரவெடி:

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த தைரிய கேப்டனானார் அஸ்வின். கெய்லும், கே.எல்.ராகுலும் தொடக்கத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் ஆடினர், புவனேஷ்வர் குமார், கிறிஸ் ஜோர்டானும் சிறப்பாக வீசி ஒரு 12 பந்துகளில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை.

கெய்ல் 14 ரன்களில் இருந்த போது ரஷீத் பந்தை கட் செய்ய விக்கெட் கீப்பர் சஹா ஒரு கடினமான கேட்ச் வாய்ப்பை விட்டார். இதைப் பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும் ஒருவேளை சன் ரைசர்ஸ் தன் வெற்றிப்பயணத்தைக் கூட தொடர்ந்திருக்கலாம்.

முதலில் கெய்ல் ஜோர்டான், ரஷீத் கான் ஆகியோரை 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி அடித்தார். கே.எல்.ராகுல் புவனேஷ்வர் குமார் பந்தில் எல்.பி. என்று அவுட் கொடுக்கப்பட்டார் ஆனால் பந்து மட்டையில் லேசாகப் பட்டது தெரியவந்ததால் ரிவியூவில் பிழைத்தார்.

ரஷீத் கானின் 5வது ஓவரில் புல்டாஸ் ஒன்றை வீச அலட்டிக்கொள்ளாத சிக்ஸ். அடுத்து ரஷீத் என்ன வீசுகிறார் என்றெல்லாம் கெய்ல் பார்க்கவில்லை அடுத்து கூக்ளியில் பீட்டன் ஆனாலும் அதற்கு அடுத்த பந்தை மீண்டும் ஜென் அமைதியுடன் லாங் ஆனில் சிக்ஸ். 6வது ஓவரில் சித்தார்த் கவுலை ராகுல் 2 ஆஃப் திசை அற்புத பவுண்டரிகளை அடிக்க 6 ஓவர்களில் 49/0 என்று பவர் பிளே முடிந்தது.

கெய்ல் சரவெடி சதமெடுத்தும் கிங்ஸ் லெவன் 200 ரன்களை எட்ட முடியாததற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்தால் 7வது ஓவரில் ஹூடா 2 ரன்களையே கொடுத்தார், 8வது ஓவரில் ரஷீத் 2 ரன்களையே கொடுத்து ராகுல் (18) விக்கெட்டைக் கைப்பற்றினார். பிறகு 11 மற்றும் 13வது ஓவர்களில் வெறும் 4+4 ரன்களே வந்தது. புவனேஷ்வர் ஒரு ஓவ்ரில் பவுண்டரியே கொடுக்காமல் 8 ரன்களையும் ஜோர்டான் கடைசியில் ஒரு ஓவரில் 6 ரன்களையே கொடுத்ததும் கிங்ஸ் லெவன் அணியை 200 ரன்களை எடுக்க விடாமல் தடுத்தது.

ராகுல் அவுட் ஆனவுடன் மயங்க் அகர்வால் இறங்கினார், ஹூடா வீச கெய்ல் ஒரு அடி முன்னால் வந்து ஒரே தூக்குத் தூக்கி சிக்ஸ் விளாசினார். ஷாகிப் அல் ஹசனை அகர்வால் 1 பவுண்டரி 1 சிக்சர் அடித்தார் ஆனால் இவரும் 9 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருக்கையில் கவுல் பந்தில் நேராக பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 11 ஓவர்களில் கிங்ஸ் லெவன் 83/2 என்று இருந்தது.

கிறிஸ் கெய்ல் தன் அரைசதத்தை 39 பந்துகளில் எடுத்தார், ஆனால் இவரது இருப்பே பவுலர்களை அச்சுறுத்தியது. வீட்டை ஒரு புலி கண்ணுக்குத் தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் சன் ரைசர்ஸ் அணிக்கு இருந்திருக்கும்.

அது போல்தான் இந்தப் புலி திடீரென பாய்ந்தது, ரஷீத் கானை, ஏ.பி.டிவில்லியர்ஸ் ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் விளாசியதற்குப் பிறகு நேற்று கெய்ல் வரிசையாக 4 சிக்சர்களை அடிக்க அந்த ஓவரில் 27 ரன்கள் வந்தது. ஒன்று புல் லெந்த் அல்லது கொஞ்சம் ஷார்ட், எங்கு போட்டாலும் அடிதான். ரஷீத்துக்கு இது ஒரு புதிய அனுபவம்.

சன் ரைசர்ஸின் முக்கிய பவுலருக்கே இந்தக் கதி ஏற்பட்ட பிறகு ஹூடா போன்றவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை 11வது சிக்சரை அடித்து 99 ரன்களுக்கு வந்த கெய்ல் 19 பந்துகளில் அடுத்த 50 ரன்களை எடுத்து ஐபிஎல் 6வது சதம் கண்டார். கருண் நாயரும் அபாரமாக ஆடி 31 ரன்களை எடுக்க கடைசி ஓவரில் ஏரோன் பிஞ்ச், ரஷீத் கானை ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து 14 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார், கெய்ல் 63 பந்துகளில் 104 நாட் அவுட்.

சன் ரைசர்ஸ் அணியில் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 25 ரன்கள் 1 விக்கெட், ஒரு பவுண்டரி 1 சிக்சர்தான் கொடுத்தார். 10 டாட்பால்கள். ரஷீத் கான் 4 ஓவர்களில் 55 ரன்கள்.

காயமடைந்த ஷிகர் தவண்; விரட்டலில் முடக்கப்பட்ட சன் ரைசர்ஸ்:

கெய்ல் அதிரடியில் ரணகளமாகிப் போன பிட்சில் இலக்கை விரட்டக் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியில் ஷிகர் தவண் காயமடைந்து வெளியேறியது பெரிய சறுக்கலுக்கு இட்டுச் சென்றது, பாரிந்தர் ஸ்ரண் பந்து ஒன்று நல்ல லெந்த்தில் பிட்ச் ஆகி எழும்பியது தவண் கட் செய்ய முயன்றார் இடது முழங்கையில் சரியான அடி. வெளியேறினார்.

மோஹித் சர்மா அன்று கடைசி ஓவரில் தோனியைப் பிடித்து ஆட்டிய தொடர்ச்சியாக பந்தின் வேகத்தை அருமையாக ஏற்றி இறக்கி சஹாவையும் யூசுப் பத்தானையும் பவுல்டு செய்தார்.

கேன் வில்லியம்சன் (54), மணீஷ் பாண்டே (57) ஆகியோர் 3வது விக்கெட்டுக்காக 76 ரன்களைச் சேர்த்தாலும் தேவைப்படும் ரன் விகிதத்துக்கு ஏற்ப அவர்கள் அடிக்க முடியவில்லை. மேலும் ஆப்கானின் புதிர் ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான் 4 ஓவர்களில் 27 ரன்களையே கொடுத்தார், அதில் ஒரேயொரு 4 மட்டும்தான். இத்தனைக்கும் 5 டாட்பால்கள்தான். அப்படியென்றால் அவர் பவுண்டரி பந்துகளை அதிகம் வீசவில்லை என்று பொருள். ஆண்ட்ரூ டையும் சன் ரைசர்ஸ் ‘டைட்’ செய்து 4 ஓவர்களில் 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மோஹித் சர்மா 51 ரன்களைக் கொடுத்தாலும் தொடக்கத்தில் 2 விக்கெட்டுகள் மூலம் முடக்கினார். அஸ்வின் 4 ஓவர்களில் 53 ரன்கள் என்று சோபிக்கவில்லை. 178/4 என்று முடிந்தது.

ஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x