GT vs DC | குஜராத் டைட்டன்ஸை பந்தாடிய டெல்லி கேபிடல்ஸ்: 8.5 ஓவர்களில் இலக்கை எட்டியது

டெல்லி வீரர் ஃப்ரேசர் மெக்குர்க்
டெல்லி வீரர் ஃப்ரேசர் மெக்குர்க்
Updated on
1 min read

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 32-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணி அதனை விரைவாக எட்டி இருந்தது.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் 31 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

டெல்லி அணியின் பவுலர் முகேஷ் குமார் 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஸ்டப்ஸ் மற்றும் இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். அக்சர் படேல் மற்றும் கலீல் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி கேபிடல்ஸ் அணி விரட்டியது. பிரித்வி ஷா மற்றும் ஃப்ரேசர் மெக்குர்க் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். தொடக்கம் முதலே இலக்கை விரைந்து எட்ட முயன்றது அந்த அணி. பவர்பிளே ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி.

மெக்குர்க் 20, அபிஷேக் போரல் 15, ஷாய் ஹோப் 19, பிரித்வி 7 ரன்கள் எடுத்திருந்தனர். சுமித் குமார் 9 ரன்கள் மற்றும் பந்த் 16 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தனர்.

8.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது டெல்லி. இதன் மூலம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. கடந்த சில நாட்களாக நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசன் போட்டிகளில் சுமார் 200+ ரன்கள் அணிகள் எட்டி இருந்தன. இது சென்னை - மும்பை, பெங்களூரு - ஹைதராபாத், ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டிகளில் பார்க்க முடிந்தது.

இந்த சூழலில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் மொத்தமாகவே 181 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் குஜராத் அணி எடுத்த மிகக் குறைந்த ரன்களாக டெல்லி உடனான இந்தப் போட்டி அமைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது டெல்லி கேபிடல்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in