

பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 10-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான ஆர்.பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி ஆகியோர் நேருக்கு நேர் மோதினார்கள்.
இந்த ஆட்டம் 39-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான இயன் நெபோம்னியாச்சி, இந்தியாவின் டி.குகேஷ் மோதிய ஆட்டம் 40-வது காய் நகர்த்தலின் போது டிரா ஆனது.
அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரான நிஜாத் அபாசோவ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இதில் 58-வது காய் நகர்த்தலின் போது ஹிகாரு நகமுரா வெற்றி பெற்றார். இதேபோன்று அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருனா 47-வது காய் நகர்த்தலின் போது பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜாவை வீழ்த்தினார்.
10 சுற்றுகளின் முடிவில் இயன் நெபோம்னியாச்சி, குகேஷ் ஆகியோர் தலா 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். பிரக்ஞானந்தா, ஹிகாரு நகமுரா, ஃபேபியானோ கருனாஆகியோர் தலா 5.5 புள்ளிகளுடனும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடனும் உள்ளனர். அலிரேசா ஃபிரோஸ்ஜா (3.5 புள்ளிகள்), நிஜாத் அபாசோவ் (3 புள்ளிகள்) ஆகியோர் கடைசி இரு இடங்களில் உள்ளனர்.
மகளிர் பிரிவில் இந்தியாவின் ஆர்.வைஷாலி, பல்கேரியாவின் நூர்கியுல் சலிமோவாவை எதிர்த்து விளையாடினார். இதில் வைஷாலி 88-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். மற்றொரு இந்தியவீராங்கனையான கொனேரு ஹம்பி, சீனாவின் டான் ஸோங்கிக்கு எதிரான ஆட்டத்தை 72-வது காய் நகர்த்தலின் போது டிரா செய்தார்.
10 சுற்றுகளின் முடிவில் சீனாவின் டான் ஸோங்கி, லீ டிங்ஜிஆகியோர் தலா 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோரியாச்கினா, கேத்ரீனா லக்னோ ஆகியோர் தலா 5.5 புள்ளிகளுடன் உள்ளனர்.
கொனேரு ஹம்பி 4.5 புள்ளிகளுடனும், உக்ரைனின் அனா முசிசுக், பல்கேரியாவின் நூர்கியுல் சலிமோவா ஆகியோர் தலா 4 புள்ளிகளுடனும், வைஷாலி 3.5 புள்ளிகளுடனும் உள்ளனர்.