‘என்னால் முடியும் என்று நம்பினேன்’ - ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர்

ஜாஸ் பட்லர் | படம்: பிசிசிஐ
ஜாஸ் பட்லர் | படம்: பிசிசிஐ
Updated on
1 min read

கொல்கத்தா: ‘போராடடா... ஒரு வாளேந்தடா…’ பாணியிலான இன்னிங்ஸை ஆடி அசத்தி இருந்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லர். களத்தில் பேட்டை கொண்டு போராடிய அவர், 224 ரன்கள் என்ற இலக்கை கொல்கத்தாவுக்கு எதிராக தனது அணி வெற்றிகரமாக கடக்க உதவினார்.

அதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 7-வது சதத்தையும் அவர் பதிவு செய்தார். நடப்பு சீசனில் அவர் பதிவு செய்துள்ள 2-வது சதம் இது. முதல் 6 ஓவர்களில் 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 20 ரன்களை எடுத்திருந்தார். 7 முதல் 14-வது ஓவர்கள் வரையில் 21 பந்துகளில் 22 ரன்களை எடுத்தார். கடைசி 6 ஓவர்களில் 27 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் குவித்தார். தனது இன்னிங்ஸ் குறித்து அவர் தெரிவித்தது

“முடியும் என்ற நம்பிக்கை தான் இந்த ஆட்டத்தில் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. ரிதம் கிடைக்காமல் தவித்த போது ‘அமைதியாக இரு, தொடர்ந்து முன் செல்’ என்பதை எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இதற்கு முன்பு தோனி, கோலி போன்ற வீரர்கள், நம்பிக்கையுடன் கடைசி வரை களத்தில் நின்று விளையாடியதை பலமுறை நாம் பார்த்துள்ளோம். அதை தான் நானும் செய்ய முயன்றேன்.

பெரிய இலக்கை விரட்டும் போது விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றி பெற செய்தது திருப்தி அளிக்கிறது. நெகட்டிவ் எண்ணங்கள் எப்போது வந்தாலும் அதற்கு முற்றிலும் நேர்மாறாக நான் எண்ணுவது வழக்கம். அதுதான் என்னை களத்தில் தொடர்ந்து முன்னே செல்ல வைக்கிறது” என ஆட்ட நாயகன் விருது பெற்ற பட்லர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in