Published : 16 Apr 2024 03:31 PM
Last Updated : 16 Apr 2024 03:31 PM

“ஆர்சிபி டீமை வேற யாரிடமாவது வித்துடுங்க” - டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி காட்டம்

முன்னாள் இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, ஆர்சிபி அணி மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, 7 போட்டிகளில் 6-ல் தோற்றதற்காக அணியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆர்சிபியை அடித்து நொறுக்கியது. இதற்கு மேல் முடிந்தால் ஆர்சிபியை வேறு யாரேனும் அடித்துப் பாருங்கள் என்று சவால் விடும் அளவுக்கு அந்த அடி. இந்த அடியிலிருந்து எழ ஆர்சிபிக்கு நீண்ட காலம் பிடிக்கும்.

இந்நிலையில், முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதி, ஆர்சிபி அணியை புதிய உரிமையாளர்களிடம் விற்று விட பிசிசிஐ வழி செய்ய வேண்டும் என்று சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தள பக்கத்தில், “விளையாட்டின், ஐபிஎல் கிரிக்கெட்டின், ரசிகர்களின்... ஏன் வீரர்களின் நலன் கருதியாவது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வேறு உரிமையாளரிடம் ஒப்படைக்க பிசிசிஐ பலவந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற அணிகள் எப்படி ஒரு ஸ்போர்ட்ஸ் பிரான்ச்சைஸ் ஆகச் செயல்படுகிறதோ அதேபோல் ஆர்சிபி அணியையும் ஸ்போர்ட்ஸ் அணியாக மாற்றும் உரிமையாளரிடம் விற்று விடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார் மகேஷ் பூபதி.

கிறிஸ் கெய்ல், ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆடிய அணி இன்று விராட் கோலி போன்ற உலக நம்பர் 1 பேட்டர் இருந்தும் தட்டுத் தடுமாறுவது வட்டார ரசிகர்கள் பேஸ்-ஐ நம்பியிருக்கும் ஐபிஎல் வர்த்தகத்துக்கே ஆர்சிபி ஒரு பெரிய இடையூறாக உள்ளது என்று கருதப்படுகிறது.

ஒரு காலத்தில் கிறிஸ் கெய்லின் அதிரடி 175 ரன்களுடன் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக எடுத்த 263 ரன்கள்தான் ஐபிஎல் சாதனையாக இருந்து வந்தது. ஆனால், இந்த ஐபிஎல் தொடரில் இந்தச் சாதனையை இருமுறை உடைத்து விட்டது சன்ரைசர்ஸ்.

நேற்று சன்ரைசர்ஸை விடவும் ஆர்சிபி அணியில் டுபிளெசிஸ், விராட் கோலி அருமையாகவே தொடங்கினர் பவர் ப்ளே முடிவில் 79 ரன்களை ஆர்சிபி எடுத்த போது சன் ரைசர்ஸ் அணி பவர் ப்ளேயில் எடுத்த ஸ்கோரை விட அதிகமாகவே இருந்தது. ஆனால் இலக்கு பெரிது. இதில் கம்மின்ஸ் வேறு அடுத்தடுத்து விக்கெட்டுகளைச் சாய்த்தார். தினேஷ் கார்த்திக் இன்னிங்ஸ் எதுவும் சாத்தியம் என்ற வகையில் அமைந்தது. ஆனால் அவருக்கும் வரம்பு உண்டல்லவா. 280+ இலக்கை எல்லாம் எப்படியும் விரட்ட முடியாது.

ஆனால், தினேஷ் கார்த்திக் இலக்கை விரட்ட முடியும் என்று நம்பினாரோ இல்லையோ, அங்கிருந்த ஆர்சிபி ரசிகர்களுக்கு மட்டுமல்ல கிரிக்கெட்டின் அனைத்து ரசிகர்களுக்கும் தன் ஸ்ட்ரோக் ப்ளே மூலம் திகைப்பை ஏற்படுத்தினார். இப்படி ஃபைட் செய்வதுதான் ஐபிஎல் ரசிகர்களைத் தக்க வைக்க உதவும். அதில் தினேஷ் கார்த்திக்கின் நேற்றைய இன்னிங்ஸ் மிக மிக முக்கியமானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x