‘போட்டியை முடித்துக் கொடுப்பதில் ஹெட்மயர் வல்லவர்’ - சஞ்சு சாம்சன் பெருமிதம்

ஹெட்மயர்
ஹெட்மயர்
Updated on
1 min read

முலான்பூர்: போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பதில் ஷிம்ரன் ஹெட்மயர் வல்லவராகத் திகழ்கிறார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலம் முலான்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. ஜிதேஷ் சர்மா 29, லிவிங்ஸ்டன் 21, அசுதோஷ் சர்மா 21 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் அணியால் குறைவான ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2, டிரெண்ட் போல்ட், குல்தீப் சென், யுவேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதையடுத்து அதிரடியாக விளையாடிய ஷிம்ரன் ஹெட்மயர் வெற்றிக்குத் தேவையான ரன்களை விளாசினார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 39, தனுஷ் கோட்டியான் 24, ரியான் பராக் 23, ரோவ்மன் பாவெல் 11 ரன்கள் எடுத்தனர். ஷிம்ரன் ஹெட்மயர் 10 பந்துகளில் 27 ரன்கள் (ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) விளாசி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது: கடந்த ஆண்டு போட்டியைப் போலவே இந்த ஆண்டிலும் சில போட்டிகளில் எங்களுக்கு சுவாரஸ்யமான முடிவுகள் கிடைத்துள்ளன. இருப்பினும் இந்த இலக்கை எட்டிப் பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. கடைசி ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் பந்துவீசினால் நிச்சயம் இலக்கை எட்ட முடியும் என்று நினைத்தோம்.

அதேபோல் எங்கள் வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் இன்றைய தினம் மிகவும் சிறப்பாக விளையாடினார். ஹெட்மயர் கடந்த பல ஆண்டுகளாகவே எங்கள் அணிக்காக இதே போன்று பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்திருக்கிறார். போட்டிகளை வெற்றிகரமாக முடிப்பதில் அவர் வல்லவர். ரோவ்மன் பாவெல், ஹெட்மயர் எங்கள் அணியில் இருப்பது அணியை வலுவடையச் செய்துள்ளது.

அனுபவம் நிறைந்த ஹெட்மயர் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பதில் தனது திறனை மென்மேலும் வளர்த்துக் கொண்டே வருகிறார். இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in