

பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் பந்து வீச்சின் மீது புகார் எழுந்ததையடுத்து பரிசோதனைக்காக அவர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகருக்குச் செல்கிறார்.
இதனால் இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாட மாட்டார்.
அவரது பந்து வீச்சு மீது நடத்தப்படும் பரிசோதனைகள் நீடித்தால் 2வது ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழுவின் தலைவர் சொகைல் சலீம், அஜ்மலுடன் செல்கிறார்.
இலங்கைக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது அஜ்மல் வீசிய 35-40 பந்துகள் பந்து வீச்சு விதிமுறைகளை மீறியதாக இருந்தது என்று ஐசிசி நடுவர்கள் புகார் அளித்தனர்.
தூஸ்ரா மட்டுமல்ல, அவரது முக்கிய ஆயுதமான ஆஃப் ஸ்பின் பந்துகளுமே த்ரோ போல் உள்ளதாக தற்போது புகார் எழுந்தது பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து அவர் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்படுமா என்பது தெரியவரும். இந்த முறை சிக்கல் கூடுதலாகவே உள்ளதாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் கவலை வெளியிட்டது.
அப்படியே அஜ்மல் பந்து வீச அனுமதிக்கப்பட்டாலும் சில பந்துகளை அவர் வீசக்கூடாது என்று தடைவிதிக்கப்படமால் என்று தெரிகிறது.
ஐசிசி விதிமுறைகளின் படி ஒரு பவுலர் பந்து வீசும்போது தனது முழங்கையை 15 டிகிரி வரை மடக்கி வீசலாம். அதற்கு மேல் மடக்கி வீசுவது த்ரோ என்று விதிமுறை கூறுகிறது.