

பால் டேம்பரிங், ஆஸ்திரேலிய கிரிக்கெட், ஐபிஎல் என்று தன் கருத்துகளை வெளிப்படையாகவும் தைரியமாகவும் வெளியிட்டு வரும் கெவின் பீட்டர்சன் தற்போது மைக் ஆதர்டன் மற்றும் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மீது புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
ஆண்ட்ரூ ஸ்ட்ராஸால்தான் கெவின் பீட்டர்சனின் இங்கிலாந்து கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்தது என்று கடும் விமர்சனங்கள் அப்போது எழுந்தன.
இந்நிலையில் பால் டேம்பரிங் விவகாரத்தில் மைக் ஆத்தர்டன் பெயரும் அடிப்பட்டது, 1990-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது தன் பாக்கெட்டில் வைத்திருந்த அழுக்குத் துகளைத் தேய்த்து பந்தின் தன்மையை மாற்றியதாகக் கடும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு ஆத்தர்டன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன. ஆனால் அவரது பணி பறிபோகவில்லை. மாறாக ஸ்மித், வார்னர், பேங்கிராப்ட் விவகாரத்தில் விவகாரம் முற்றி தடை வரை சென்றுவிட்டது.
இது பற்றி கெவின் பீட்டர்சன் கூறும்போது, “மைக் ஆதர்டன் காலத்தில் சமூக வலைத்தளங்கள் இவ்வளவு அதிர்வுடன் செயல்பட்டிருந்தால் ஆதர்டன் கிரிக்கெட் வாழ்வே சூனியமாகியிருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் தன் ஓய்வு பற்றி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள், பகுப்பாய்வுகள் மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய பீட்டர்சன், குறிப்பாக முன்னாள் கேப்டனும் சக வீரருமான அண்ட்ரூ ஸ்ட்ராஸ் தன்னைப் பாராட்டியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தாலும் சற்றே ஏளன நகைப்புடன் கருத்து கூறியுள்ளார்.
“ஸ்ட்ராஸ் தன்னுடன் ஆடியதிலேயே நான் தான் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று என் பெயரைக் குறிப்பிட்டது எனக்கு பெரிய அளவில் ஆச்சரியத்தையே அளித்தது. காரணம் அவர்தானே என் கிரிக்கெட் பயணத்தை நிறுத்தினார்.
என்னுடைய நண்பர்களில் ஓரிருவர் இன்னமும் கூட ஸ்ட்ராஸை இதற்காக காய்ச்சி எடுத்து வருகின்றனர். ஆனால் நான் அவர்களிடம் சிரித்தபடியே கூறுவேன், கவலைப்பட வேண்டாம் என்று இப்போது பாலத்தின் அடியில் ஏகப்பட்ட தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அது போனது போனதுதான்” என்று கூறியுள்ளார்.