Published : 12 Apr 2024 06:30 AM
Last Updated : 12 Apr 2024 06:30 AM

எந்த இடத்தில் தோற்றோம் என்பதை கூறுவது கடினம்: சொல்கிறார் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி. 197 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் ரஷித் கான் 11 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் விளாசி வெற்றி தேடிக்கொடுத்தார். அவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவையாக இருந்தது.

முதல் 3 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் விளாசி அசத்தினார் ரஷித் கான். 4-வது பந்தில்ஒரு ரன் சேர்க்கப்பட்டது. அடுத்தபந்தில் 3 ரன்கள் ஓடும் முயற்சியில் அதிரடி வீரரான ராகுல் டெவாட்டியா ரன் அவுட் ஆனார். அவர், 11 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்திருந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் அவேஷ் கான் ஆஃப் ஸ்டெம்புக்கு நன்கு வெளியே வீசிய பந்தை ரஷித் கான் பாயின்ட் திசையில் பவுண்டரிக்கு விரட்ட குஜராத் அணி 199 ரன்கள் சேர்த்து வெற்றிக் கோட்டை வெற்றிகரமாக கடந்தது.

இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது குஜராத் அணி. இதனால் 5 ஆட்டங்களில் விளையாடி முதல் தோல்வியை ராஜஸ்தான் அணி சந்தித்தது. அதேவேளையில் குஜராத் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது. அந்த அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:

கடைசி பந்தில்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம். எனினும் ஒரு கேப்டனாக போட்டியை தோற்கும்போது எந்த இடத்தில் தோற்றோம் என்று உடனடியாக கூறுவது மிகவும் கடினம். குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றைப் பாராட்டியே ஆக வேண்டும். நாங்கள் இந்த ஆட்டத்தில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். நான் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 180 ரன்கள் சேர்த்தால் போராடக்கூடிய ஸ்கோராக இருக்கும் என கருதினேன். அதேவேளையில் 196 ரன்கள் சேர்த்ததால் வெற்றி ஸ்கோராக இருக்கும் என்றே நினைத்தேன்.

பனிப்பொழிவு இல்லாததால் ஆடுகளம் சற்று வறண்டு காணப்பட்டது. இதனால் பந்துகள் தாழ்வாக வந்தன. எனினும் எங்கள் பந்துவீச்சு தாக்குதலுடன் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் குஜராத் வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். நாங்கள் பேட்டிங் செய்த போது தொடக்கத்தில் விளையாடுவதற்கு கடினமாக இருந்தது. எனினும் இன்னிங்ஸை நன்றாக வேகப்படுத்தினோம். ஜெய்ப்பூர் ஆடுகளத்தில் பனிப்பொழிவு இல்லையென்றால் 197 ரன்கள் என்பதை எந்த நாளிலும் அடையலாம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x