

ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 24-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் அபார கூட்டணி அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ஜெய்ஸ்வால், 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5 பவுண்டரிகளை அவர் விளாசி இருந்தார்.
கடந்த போட்டியில் சதம் பதிவு செய்த பட்லர், 8 ரன்களில் ரஷித் கான் சுழலில் வெளியேறினார். 8-வது ஓவரில் ரியான் பராக் பேட்டில் எட்ஜ் ஆகி வந்த கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்தார் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட். இன்னிங்ஸின் பிற்பாதியிலும் சில கேட்ச்களை நழுவ விட்டிருந்தது குஜராத்.
3-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இணைந்து 130 ரன்கள் சேர்த்தனர். பராக் 48 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை அவர் விளாசினார். அவரை மோகித் சர்மா 19-வது ஓவரில் அவுட் செய்தார். சஞ்சு சாம்சன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹெட்மெயர் 13 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் குஜராத் வெற்றி பெற 197 ரன்கள் தேவைப்படுகிறது.
17-வது ஓவரில் கள நடுவரின் வொய்டு முடிவை எதிர்த்து டிஆர்எஸ் எடுத்தார் குஜராத் கேப்டன் கில். முதலில் வொய்டு இல்லை என டிவி அம்பயர் தெரிவித்தார். பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டார். அதனால் களத்தில் சற்று விரக்தியுடன் கில் காணப்பட்டார்.