

ஜெய்ப்பூர்: இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வலுவான கம்பேக் கொடுப்பார் என தாங்கள் நம்புவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் ட்ரெவர் பென்னி தெரிவித்துள்ளார். நடப்பு சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடி 39 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார்.
“ஜெய்ஸ்வாலின் அதிரடி கம்பேக் எதிரணிகளுக்கு சங்கடம் தரும் வகையில் அமையும். நாங்கள் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளோம். வழக்கமாக அவரது பேட்டில் இருந்து எங்களுக்கு கிடைக்கும் ரன்கள் கிடைக்கவில்லை. அவர் கடுமையாக பயிற்சி செய்து கொண்டு வருகிறார். சில நேரங்களில் டி20 கிரிக்கெட்டில் இது போல நடக்கும். அவரும் அதை உணர்ந்துள்ளார். நேர்மறை மனநிலையுடன் ஆட்டத்தை அணுகுகிறார். அவர் வலுவான கம்பேக் கொடுப்பார் என நாங்கள் நம்புகிறோம்.
இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக சிறந்த முறையில் நாங்கள் பயிற்சி மேற்கொண்டோம். அந்த முன் தயாரிப்பின் ரிசல்ட் தான் இந்த சீசனின் முதல் நான்கு போட்டிகளில் எங்களுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது. எங்களது பயிற்சி ஜெய்ப்பூரில் (ஹோம் கிரவுண்ட்) தான் மேற்கொள்ளப்பட்டது. சொந்த மைதானத்தில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என இந்த பயிற்சியை திட்டமிட்டோம்.
ஏனெனில், கடந்த சீசனில் இங்கு சில போட்டிகளில் நாங்கள் தோல்வியை தழுவி இருந்தோம். அதற்காகவே கவனத்துடன் இந்த முறை பயிற்சியை திட்டமிட்டோம். ரசிகர்களின் ஆதரவும் எங்களுக்கு அமோகமாக உள்ளது” என ட்ரெவர் பென்னி தெரிவித்துள்ளார்.
22 வயதான ஜெய்ஸ்வால் கடந்த 2020 சீசன் முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். 41 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 1211 ரன்களை எடுத்துள்ளார். கடந்த சீசனில் 625 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை மேற்கொள்கிறது.