

முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரெட்டி, 37 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.
பஞ்சாப் மாநிலத்தின் முலான்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங் வீசிய 4-வது ஓவரில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் ஹெட். அதே ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் மார்க்ரம் வெளியேறினார். அடுத்த ஓவரில் அபிஷேக் சர்மாவை வெளியேற்றினார் சாம் கரன்.
ராகுல் திரிபாதி 11 ரன்கள் மற்றும் கிளாசன் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவரையும் ஹர்ஷல் படேல் வெளியேற்றினார். 6-வது விக்கெட்டுக்கு இணைந்த நிதிஷ் ரெட்டி மற்றும் அப்துல் சமாத் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அர்ஷ்தீப் வீசிய 17-வது ஓவரில் அவர்கள் இருவரும் ஆட்டமிழந்தனர். சமாத் 25 ரன்களும், நிதிஷ் 64 ரன்களும் எடுத்தனர். நிதிஷ் 5 சிக்ஸர்களை விளாசி இருந்தார். முதல் 18 பந்துகளில் 14 ரன்களும், அடுத்த 19 பந்துகளில் 50 ரன்களும் அவர் எடுத்தார். பாட் கம்மின்ஸை 3 ரன்களில் போல்ட் செய்தார் ரபாடா.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஷபாஸ் அகமது, 14 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி ஓவரில் புவனேஷ்வர் குமார் 6 ரன்களில் வெளியேறினார். பஞ்சாப் அணி 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது. அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். முதல் பத்து ஓவரில் 66 ரன்களும், அடுத்த பத்து ஓவர்களில் 116 ரன்களும் எடுத்தது ஹைதராபாத்.