

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை - சேப்பாக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்தவர் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. 3 விக்கெட்களை கைப்பற்றிய அவர், 2 கேட்ச்களையும் பிடித்திருந்தார். அதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் 5-வது வீரராக அவர் இணைந்தார்.
அதோடு ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 1,000-க்கும் மேற்பட்ட ரன்கள், 150-க்கும் மேற்பட்ட விக்கெட்கள் மற்றும் 100 கேட்ச்களை பிடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றதும் அவர்தான்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, குஜராத் லயன்ஸ் அணிகளுக்காக இதற்கு முன்னர் அவர் விளையாடி உள்ளார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். மொத்தம் 231 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2776 ரன்கள், 156 விக்கெட்கள் மற்றும் 100 கேட்ச்களை அவர் பிடித்துள்ளார். இதில் சென்னை அணிக்காக 163 போட்டிகளில் விளையாடி 1,714 ரன்கள், 129 விக்கெட்கள் மற்றும் 82 கேட்ச்களை அவர் பிடித்துள்ளார்.
“இது மாதிரியான ஆடுகளத்தில் பந்து வீச நான் அதிகம் விரும்புவேன். சரியான இடத்தில் பந்தை வீச வேண்டும் என கவனம் செலுத்தினேன். இங்கு நிறைய பயிற்சி செய்துள்ளேன். அது எனக்கு உதவியது. சென்னைக்கு வந்து ஆடும் அணிகளுக்கு இங்கு செட்டில் ஆவதும், கள வியூகம் அமைப்பதும் கொஞ்சம் சவாலாக இருக்கும். எங்களுக்கு இங்கிருக்கும் சூழல் நன்கு தெரியும்” என ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜடேஜா தெரிவித்தார்.
தோனியை ‘தல’ என்றும், ரெய்னாவை ‘சின்ன தல’ என்றும் சென்னை ரசிகர்கள் அழைப்பது வழக்கம். அந்த வகையில் உங்களுக்கு ‘தளபதி’ ஓகேவா என வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கேட்க, “அதனை ரசிகர்கள் தான் வெரிஃபை செய்ய வேண்டும்” என ஜடேஜா தெரிவித்தார்.