Last Updated : 12 Aug, 2014 05:19 PM

 

Published : 12 Aug 2014 05:19 PM
Last Updated : 12 Aug 2014 05:19 PM

சயீத் அஜ்மல் த்ரோ செய்வதாக எழுந்த புகாரின் பின்னணியில்...

பாகிஸ்தான் புதிர் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்து வீசும் போது கணிசமான பந்துகளை த்ரோ செய்கிறார் என்று புகார் எழுந்துள்ளதன் பின்னணியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இருக்கலாம் என்று செய்தி வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக சயீத் அஜ்மல் சிறப்பாக வீசி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக 36 விக்கெட்டுகளை 19.61 என்ற சராசரியில் எடுத்துள்ளார் சயீத் அஜ்மல்.

மைக்கேல் கிளார்க் தலைமையில் ஆஸ்திரேலியா அணியை மீண்டும் வெல்ல முடியாத ஒரு அணியாகக் கட்டமைக்க ஆஸ்திரேலியா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க ஆஸ்திரேலியா அணி துபாய் வருகிறது. ஆகவே அஜ்மல் மீது இந்தத் திடீர் மற்றும் அகாலப் புகாரின் பின்னனியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இருக்கலாம் என்று கிரிக்கெட் ஆட்டத்தின் சில தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சயீத் அஜ்மல் த்ரோ செய்வதாக புகார் எழுப்பிய நடுவர்கள் இயன் கோல்ட் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களாக இருக்க, புரூஸ் ஆக்ஸென்போர்டு என்ற நடுவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்பது தற்செயலானதல்ல என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் கருதுகின்றனர்.

மேலும் இலங்கை வென்ற கால்லே டெஸ்ட் போட்டியில் நடுவர்கள் 12 தவறான தீர்ப்புகளை வழங்கினர். காரணம் அவரது கவனம் அஜ்மலை நோட்டம் விடுவதிலேயே இருந்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் கூட மே மாதம் 21ஆம் தேதி தனது டிவிட்டர் பதிவில் ‘பரிசோதனைச் சாலையில் இவர்கள் சரியாக வீசி விட்டு தங்கள் பந்துவீச்சிற்கு அங்கீகாரம் வாங்கி விட்டு மைதானத்தில் மீண்டும் பழைய முறையிலேயே வீசினால் யாருக்குத் தெரிந்து விடப்போகிறது” என்று அஜ்மல் கவுண்டி போட்டி ஒன்றில் 19/7 என்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியதற்கு பிராட் கேலிப் பதிவிட்டது சர்ச்சையைக் கிளப்பியதும் நினைவிருக்கலாம்.

அஜ்மல் இதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்திருந்தார். அதாவது வர்ணனையாளர்கள் ஏதாவது கூறிக்கொண்டிருப்பார்கள், ஆனால் ஆடும் ஒரு வீரர் சக வீரரைப் பற்றி இவ்வாறு கூறலாமா? என்று வருத்தம் தெரிவித்திருந்தார்

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இப்போது ஐசிசியின் நிர்வாகப் பொறுப்பை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு சந்தேகத்திற்கிடமான பந்து வீச்சு என்ற விஷயம் ஊதிப் பெருக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சேனநாயகே, நியூசிலாந்தின் வில்லியம்சன், தற்போது அஜ்மல் ஆகியோர் மீது புகார் எழுப்பப்பட்டுள்ளது.

மொயீன் அலி வீசும் லாலிபாப் ஸ்பின்னிற்கே மடிந்து போகும் இந்திய அணி பாகிஸ்தானுடன் சில டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களைத் தொடர்ந்து விளையாடவிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக உலகக் கோப்பை கிரிக்கெட் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.

இந்த நிலையில் அஜ்மலைக் கொஞ்சம் மனோவியல் ரீதியாக கவலைக்குட்படுத்தினால் அவரை நொய்மையாக்கி விடலாம் என்று மற்ற அணிகள் நினைக்கிறது என்ற விமர்சனங்களையும் முற்றிலும் மறுப்பதற்கில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x