Published : 09 Apr 2024 07:41 AM
Last Updated : 09 Apr 2024 07:41 AM

ஹைதராபாத்தை சமாளிக்குமா பஞ்சாப்? - முலான்பூரில் இன்று மோதல் @ ஐபிஎல்

முலான்பூர்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில்இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இரு அணிகளும் தலா 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்துள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 4 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 4 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுமே தங்களது கடைசிஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தன.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இம்முறை கணிக்க முடியாததாக திகழ்கிறது. அந்த அணி 5முறை சாம்பியன்களான மும்பைஇந்தியன்ஸ், சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகளை வீழ்த்தியிருந்தது. இதில் மும்பை அணிக்குஎதிராக 277 ரன்கள் குவித்துவரலாற்று சாதனை படைத்திருந்தது.

அதேவேளையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக 4 ரன்கள் வித்தியாசத்திலும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோல்வி கண்டது. பேட்டிங்கை பொறுத்தவரையில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஹெய்ன்ரிச் கிளாசன், எய்டன் மார்க்ரம் ஆகியோர் சீராக தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு வருகின்றனர். பந்து வீச்சை பொறுத்தவரையில் ஜெயதேவ் உனத்கட், மயங்க் மார்க்கண்டே, புவனேஷ்வர் குமார்ஆகியோர் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது பலவீனமாக உள்ளது.

அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர்குமார் புதிய பந்தில் தடுமாறுகிறார். 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், ஒரே ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி உள்ளார். அதேவேளையில் இரு ஆட்டங்களை தவறவிட்ட நடராஜன் இதுவரை 4 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். மேலும் 4 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பாட் கம்மின்ஸ் சிறப்பாக வீசி வருகிறார். இந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வேகம் குறைந்த பவுன்ஸர்கள், கட்டர்களை வீசி அழுத்தம் கொடுத்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் இவர்களது திறன் மேம்படக்கூடும்.

ஷிகர் தவண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. ஷிகர் தவண், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டன், சேம்கரண் ஆகியோரும் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள். ஆனால் ஷிகர் தவணை தவிர மற்ற இருவர்களிடம் இருந்துதொடர்ச்சியான திறன் வெளிப்படுவது இல்லை. பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோரிடம் இருந்து எதிர்பார்த்த அளவிலான செயல் திறன் வெளிவரவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷசாங் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் விளாசியதால் வெற்றி சாத்தியமானது. அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் இறுதிக்கட்ட ஓவர்களில் பஞ்சாப் அணி அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது பலவீனமாக உள்ளது. 6 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள காகிசோ ரபாடா மட்டுமே நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார். அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் படேல், ராகுல் சாஹர் ஆகியோர் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பவர்களாக திகழ்கின்றனர். ஹர்பிரீத் பிரார் சிறப்பாக வீசினாலும் அவரிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல்திறன் வெளிப்படவில்லை. எனினும் இன்றைய ஆட்டத்தை சொந்த மண்ணில் எதிர்கொள்வதில் பஞ்சாப் அணி கூடுதல் முனைப்புடன் களமிறங்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x