

லக்னோ: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. 164 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணியானது 18.5 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லக்னோ அணிக்குஇது இந்த சீசனில் ஹாட்ரிக் வெற்றியாகவும் ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணிக்கு எதிரான முதல் வெற்றியாகவும் அமைந்தது.
மிதவேகப்பந்து வீச்சாளரான யாஷ் தாக்குர் 3.5 ஓவர்களை விசி ஒரு மெய்டனுடன் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி லக்னோ அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். 150 கிலோ மீட்டர்வேகத்துக்கு மேல் சீராக வீசும் மயங்க் யாதவ் ஒரே ஒரு ஓவரை மட்டுமே வீசிய நிலையில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அந்த சூழ்நிலையில் யாஷ் தாக்குர் சிறப்பாக பேட் செய்து கொண்டிருந்த ஷுப்மன் கில்லை போல்டாக்கி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் பின்னரேகுஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்து தோல்வியை சந்தித்தது.
ஆட்ட நாயகன் விருது வென்ற யாஷ் தாக்குர் கூறியதாவது: மயங்க் யாதவ் ஒரு அசாதாரண வீரர், அவர் உருவாக்கும் வேகம் அபாரமானது. எனக்கு என்னுடைய வரம்புகளும், பலமும் தெரியும். அதை நம்பியே செயல்படுகிறேன். மயங்க் யாதவின் காயம் குறித்து கவலைப்பட வேண்டியது இல்லை. அவர், நன்றாக இருக்கிறார். மயங்க் யாதவ் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறியதும் கேப்டன் கே.எல்.ராகுல், என்னிடம், இது உங்களுடைய நாளாக இருக்கலாம். நீங்கள் எங்களுக்காக போட்டியை வென்று கொடுக்கலாம் எனக்கூறினார். மேலும் அதிகம் யோசிக்க வேண்டாம், உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள் எனவும் யோசனை வழங்கினார். எப்போதுமே நாங்கள் கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவோம். வெளிப்புற காரணிகள் குறித்து யோசித்து நேரத்தை வீணடிக்க மாட்டோம்.
என் மீது எழும் எதிர்பார்ப்புகளையும் அதனால் உருவாகும் அழுத்தத்தையும் பெரிய கவலையாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.
மாறாக வெளியில் உள்ளவர்கள் அல்லது எனது அணி நான் போட்டிகளை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். அணிக்காக போட்டிகளை வெல்லும்பொறுப்பை நான் அனுபவிக்கிறேன்.
ஆடுகளம் மந்தமாக இருப்பதை நாங்கள் அறிந்திருந்தோம், எனவே அதற்கு தகுந்தவாறு திட்டங்களை விவாதித்தோம். ரன்களை விட்டுக்கொடுத்தாலும் திட்டத்தை கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்தால் வெற்றி பெறலாம் என கே.எல்.ராகுல் அறிவுரைகள் வழங்கினார். இதன்படியே செயல்பட்டதால் வெற்றி வசமானது. பந்து வீச்சில் மாறுபட்ட கோணங்கள், வேகம் குறைந்தபந்துகள், பவுன்ஸர்கள் ஆகியவற்றை பயன்படுத்தியதால் சிறப்பாக செயல்பட முடிந்தது.
இவ்வாறு யாஷ் தாக்குர் கூறினார்.