Published : 10 Apr 2018 03:36 PM
Last Updated : 10 Apr 2018 03:36 PM

பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் கண்டார், பட்லர் வீழ்ந்தார், அபார கேட்ச்கள்: ரஷீத் கான் எனும் அற்புதன்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சுவாரசியமற்றதாகப் போனாலும் ரஷீத் கான் என்ற ஆப்கான் அற்புதனின் அர்ப்பணிப்பு, மற்றும் பன்முகத்திறன் ரசிகர்களை வியக்க வைத்தது.

சன் ரைசர்ஸ் அணி மிகச் சாமர்த்தியமாக தேர்வு செய்த வீரர்களுல் ஆப்கான் லெக்ஸ்பின்னர் ரஷீத் கான் முதன்மையானவர்.

ரஷீத் கான் 44 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள சிக்கன விகிதம் ஓவருக்கு 3.96 தான். ஒருமுறை 18 ரன்களூக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே இவரது சிறந்த பந்து வீச்சு. சர்வதேச டி20 போட்டிகளில் 29 போட்டிகளில் 47 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் இதில் ஒருமுறை 3 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். சிக்கன விகிதம் 5.86தான். மொத்தம் 92 டி20 போட்டிகளில் 136 விக்கெட்டுகள் சிக்கன விகிதம் ஓவருக்கு 5.80.

இவரது பிளைட், ட்ரிஃப்ட் ஆகியவற்றை சரியாக ஆடிய வீரர்கள் எண்ணிக்கைக் குறைவு, இவர் பல்வேறு டி20 தொடர்களில் பலதரப்பட்ட அதிரடி வீரர்களுக்கும் பந்து வீசி தன்னை நிரூபித்துள்ளார். கரீபியன் பிரிமியர் லீகில் மே.இ.தீவுகளின் இளம் அதிரடி வீரர்கள் அங்கு ஆடும் பிற நாட்டு சர்வதேச அதிரடி வீரர்களும் ரஷீத் கானை இதுவரை சரியாக ஆடியதில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் இங்கிலாந்தின் அபாய அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு நேற்று ஐபிஎல் கிரிக்கெட்டில் வீசிய ஓவர் பிரமாதத்தின் ரகத்தைச் சேர்ந்தது.

பவர் ப்ளே முடிந்தவுடன் 8-வது ஒவரில் ரஷீத் கானைப் பந்து வீச அழைத்தார் சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்சன். முதல் பந்து லெக் திசையில் வீசப்பட்டது ஸ்டோக்ஸினால் மட்டையை பந்துடன் தொடர்பு படுத்த முடியவில்லை.

2வது பந்தே ஸ்டோக்ஸ் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று அவருக்கு குறுக்காகச் சென்ற பந்தில் பீட் ஆனார். அடுத்த பந்தும் சறுக்கிக் கொண்டு வந்து லேசாக திரும்பியது மிடில் ஸ்டம்புக்கு நேராக காலில் வாங்கினார். ஆனால் மட்டையின் உள்விளிம்பில் பட்டதால் பிழைத்தார். அடுத்த பந்தும் இன்சைடு எட்ஜ், ஆனால் ஸ்டோக்ஸ் 1 ரன் எடுத்து எதிர்முனைக்குச் சென்றார். 6வது பந்தில் சஞ்சு சாம்சன், ரஷீத் கானின் கூக்ளியைக் கணிக்காமல் ஆடி அனைத்து ஸ்டம்புகளும் தெரிய கட் ஆட முயன்றார் அதிர்ஷ்டவசமாக பந்து மட்டையின் உள்விளிமிபில் பட்டு பேடில் பட்டது.

இதற்கு முன்னர் பென் ஸ்டோக்ஸை இருமுறை வீழ்த்தியுள்ளார் ரஷீத் கான். சஞ்சு சாம்சனும் இன்னொரு முறை எட்ஜ் செய்தார், திரிபாதி இவரை பவுண்டரி அடித்தாலும் பிளைட்டில் பீட் ஆனார். திரிபாதியின் தவறான ஸ்வீப் ஷாட் ஒன்று பீல்டருக்கு முன்னால் விழுந்தது. தவறைத் தூண்டியவர் ரஷீத் கான். பிறகு பட்லரை பவுல்டு செய்தார். பட்லரையும் 3வது முறை வீழ்த்துகிறார் ரஷீத் கான். மொத்தம் 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்ததில் 3 பவுண்டரிகளை மட்டுமே கொடுத்தார். அதிலும் இரண்டு பவுண்டரிகள் திருப்தியற்ற பவுண்டரிகள் ஆகும். மொத்தம் 11 டாட் பால்கள்.

முன்னதாக ரஹானே அடித்த ஹை பிளிக் ஷாட்டை டீப் ஸ்கொயர்லெக்கில் பிடித்த கேட்சும் சஞ்சு சாம்சன் நன்றாக ஆடிக் கொண்டிருந்த போது ஸ்வீப்பர் கவரில் சறுக்கியபடி வந்து பிடித்த கேட்சும் அற்புதமானது. மொத்தத்தில் இந்த ஐபிஎல் தொடரிலும் அடுத்த உலகக்கோப்பையிலும் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய ஒரு சக்தியாக ரஷீத் கான் எழுச்சியுறுவார் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x