Published : 08 Apr 2024 08:15 AM
Last Updated : 08 Apr 2024 08:15 AM

அப்பாடா.. மும்பை அணிக்கு முதல் வெற்றி!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த சீசனில் தொடர்ச்சியாக 3 தோல்விகளைப் பெற்ற பிறகு முதல் வெற்றியை நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி பெற்றுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 80 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ரோஹித் 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த நிலையில், அக்சர் படேல் பந்துவீச்சில் போல்டானார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.

இதைத் தொடர்ந்து காயத்திலிருந்து மீண்டு நேற்று களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரசிகர்களை ஏமாற்றினார். 2 பந்துகளைச் சந்தித்த அவர் ரன் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். மறுமுனையில் இஷான் கிஷன் 23 பந்துகளில் 42 ரன்கள் (2 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் வீழ்ந்தார். ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 39 ரன்களும், திலக் வர்மா 5 பந்துகளில் 6 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

6-வது விக்கெட்டுக்கு ஜோடிசேர்ந்த டிம் டேவிட்டும், ரொமாரியோ ஷெப்பர்டும் கடைசி ஓவர்களில் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டனர்.

20-வது ஓவரில் ரொமாரியோ ஷெப்பர்ட் 32 ரன்களை (4 சிக்ஸர், 2 பவுண்டரி) விளாசினார். டிம் டேவிட் 45 ரன்களும் (21 பந்துகள், 2 பவுண்டரி, 4 சிக்ஸர்), ரொமாரியோ ஷெப்பர்ட்39 ரன்களும் (10 பந்துகள், 3 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி தரப்பில் அன்ரிச் நோர்க்கியா, அக்சர் படேல் ஆகியோர் தலா 2, கலீல் அகமது ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு205 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. டெல்லி அணி தரப்பில் பிரித்வி ஷா 66 (40 பந்துகள், 8 பவுண்டரி, 3 சிக்ஸர்), அபிஷேக் போரல் 41 (31 பந்து, 5 பவுண்டரி) ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மட்டும் 25 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். கடைசி ஓவர்களில் மும்பை அணியினர் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால் டெல்லி அணியால் வெற்றி பெற முடியவில்லை.

மும்பை தரப்பில் ஜெரால்டு கோட்ஸி 4, பும்ரா 2, ஷெப்பர்ட் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

மும்பை அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளைப் பெற்ற பின்னர் முதல் வெற்றியை நேற்று பெற்றதால் மும்பை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதே நேரத்தில் டெல்லி அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகளைப் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x