Published : 07 Apr 2024 08:19 PM
Last Updated : 07 Apr 2024 08:19 PM

MI vs DC | மும்பைக்கு முதல் வெற்றி - டெல்லிக்கு எதிராக ரொமாரியோ ஷெப்பர்ட் அதிரடி!

ரொமாரியோ ஷெப்பர்ட்

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 20-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 29 ரன்களில் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் நடப்பு சீசனில் முதல் வெற்றியை பெற்றுள்ளது மும்பை அணி. அந்த அணிக்காக ரொமாரியோ ஷெப்பர்ட் 10 பந்துகளில் 39 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை அணிக்காக முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். இருவரும் 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித், 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த சீசனில் முதல் முறையாக விளையாடிய சூர்யகுமார் யாதவ், ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

தொடர்ந்து ஹர்திக் பாண்டியா பேட் செய்ய வந்தார். அதிரடி காட்டிய இஷான் கிஷன் 42 ரன்களில் வெளியேறினார். ரோகித் மற்றும் இஷான் என இருவரையும் அக்சர் வெளியேற்றினார். திலக் வர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் உடன் இணைந்து 60 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஹர்திக். நிதானமாக ஆடிய அவர் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது மும்பை அணி. டிம் டேவிட் 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். 7-வது பேட்ஸ்மேனாக களம் கண்ட ரொமாரியோ ஷெப்பர்ட், 10 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து மிரட்டினார். 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசியிருந்தார். டெல்லி அணிக்காக அக்சர் மற்றும் நோர்க்யா தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். கலீல் அகமது 1 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி அணி விரட்டியது. பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். வார்னர் 10 ரன்களில் வெளியேறினார். பின்னர் பிரித்வி ஷா மற்றும் அபிஷேக் போரல் இணைந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பிரித்வி 66 ரன்களிலும், அபிஷேக் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடினார். மறுமுனையில் கேப்டன் பந்த், அக்சர் படேல், லலித் யாதவ், குமார் குஷக்ரா, ஜய் ரிச்சர்ட்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது டெல்லி. அதன் மூலம் 29 ரன்களில் மும்பை அணி வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் இந்த வெற்றியை மும்பை பதிவு செய்துள்ளது. மும்பை அணிக்காக ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்கள், பும்ரா 2 விக்கெட்கள் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் 1 விக்கெட் வீழ்த்தினர். அக்சர் ரன் அவுட் ஆனார். ஆட்ட நாயகன் விருதை ரொமாரியோ ஷெப்பர்ட் வென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x