Published : 07 Apr 2024 06:17 AM
Last Updated : 07 Apr 2024 06:17 AM

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று மோதல்: மயங்க் யாதவ் வேகத்தை சமாளிக்குமா குஜராத் டைட்டன்ஸ்?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் மயங்க் யாதவ் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல்

லக்னோ: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்த சீசனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் தோல்வியுடன் தொடங்கிய லக்னோ அணி அதன் பின்னர் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளை வீழ்த்தி அசத்தியது. இந்த இரு ஆட்டத்திலும் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார் இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய மயங்க் யாதவ், பெங்களூரு அணிக்கு எதிராக 14 ரன்களை மட்டுமே வழங்கி 3 பிரதான விக்கெட்களை சாய்த்திருந்தார். 21 வயதான மயங்க் யாதவ் நடு ஓவர்களில் 150 கிலோ மீட்டருக்கு மேல் சீரான வேகத்துடன் பந்து வீசுவதுடன் துல்லியமாகவும், கட்டுக்கோப்புடன் செயல்படுவது பெரிய பலமாக உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் அவர், குஜராத் அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் குயிண்டன் டி காக், நிகோலஸ் பூரன் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். கே.எல்.ராகுல் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினாலும் அதை பெரிய அளவிலான ரன் குவிப்பாக மாற்றத் தவறுகிறார். இன்றைய ஆட்டத்தில் அவர், நிலைத்து நின்று பின்னர் அதிரடி காட்டுவதில் தீவிரம் காட்டக்கூடும். கிருணல் பாண்டியா, தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஆகியோரும் பார்முக்கு திரும்பினால் அணியின் பலம் மேலும் அதிகரிக்கும். பந்து வீச்சில் நவீன் உல் ஹக், யாஷ் தாக்குர், மோஷின் கான், மார்கஸ் ஸ்டாயினிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோர் முன்னேற்றம் காண்பது அவசியம்.

ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 4 ஆட்டங்களில் விளையாடி தலா 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 48 பந்துகளில் 89 ரன்கள் விளாசிய ஷுப்மன் கில்லிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டைவீச்சு வெளிப்படக்கூடும். சாய் சுதர்சன் சீராக ரன்கள் சேர்த்தாலும் அவரிடம் இருந்து தாக்குதல் ஆட்டம் வெளிப்படாதது ரன்குவிப்பில் சற்று தேக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக களமிறங்காத டேவிட் மில்லர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும். அவர், களமிறங்கும் பட்சத்தில் கேன் வில்லியம்சன் வெளியே அமரவைக்கப்படக்கூடும். ஆல் ரவுண்டரான விஜய் சங்கர், தொடக்க வீரரான ரித்திமான் சாஹா ஆகியோரிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான ஆட்டத்திறன் வெளிப்படவில்லை. இவர்கள் விரைவில் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் கடந்த சில ஆட்டங்களாக சிறப்பாக செயல்பட்ட மோஹித் சர்மா, பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்தார். மேலும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானிடம் இருந்து இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான பந்து வீச்சு வெளிப்படவில்லை. ஆல்ரவுண்டரான அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் நிலைமையும் அதேபோன்றே உள்ளது. தொடர் தோல்வியை தவிர்க்க வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சு துறையும் எழுச்சியுடன் செயல்பட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x