

ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் தொடரின் 19-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி 183 ரன்கள் குவித்தது. அபாரமாக பேட் செய்த கோலி 113 ரன்கள் குவித்தார்.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆர்சிபி அணிக்காக கேப்டன் டூப்ளசி மற்றும் விராட் கோலி இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் 125 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் 7,500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி இந்தப் போட்டியில் படைத்தார்.
33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையில் டூப்ளசி ஆட்டமிழந்தார். சஹல் அவரை வெளியேற்றினார். 14 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது ஆர்சிபி. பின்னர் வந்த மேக்ஸ்வெல் மற்றும் சவுரவ் சவுகான் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். மறுபக்கம் சிறப்பாக ஆடிய கோலி, 67 பந்துகளில் சதம் பதிவு செய்தார். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது 8-வது சதமாகும்.
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கோலி, 72 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். 12 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் தனது இன்னிங்ஸில் விளாசி இருந்தார். கிரீன், 5 ரன்கள் எடுத்திருந்தார். ராஜஸ்தான் அணிக்காக சஹல் 2 விக்கெட் மற்றும் பர்கர் 1 விக்கெட் வீழ்த்தினர். 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் விரட்டுகிறது.