

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் நேற்று இரவு ஹைதராபாத் உப்பல் விளையாட்டு மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முன்னதாக, நேற்று முன்தினம் இந்த மைதானத்தில் மின் கட்டண பாக்கி பிரச்சினை காரணமாக திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
எனினும் ஜெனரேட்டர் உதவியுடன் வீரர்கள் பயிற்சி பெற்றனர்.இதனால் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் இடையிலான ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்தது.
இதற்கு காரணமாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம், மைதானத்துக்கு ரூ.1.67 கோடி வரை மின் கட்டணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதுதான். இது தொடர்பாக நேற்று காலை மைதான நிர்வாகிகள் மின் வாரிய துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் முடிவில் மைதான அதிகாரிகள் தரப்பில் அபராத தொகையை செலுத்த முன் வந்தனர். இதைத்தொடர்ந்து சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியின் போது தடங்கலின்றி மின் விநியோகம் செய்யப்பட்டது.