

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 4 அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா ஏ அணியை இந்தியா ஏ அணி எளிதில் வீழ்த்தியது.
இதன் மூலம் ராபின் உத்தப்பா தலைமையில் இந்தியா ஏ அணி இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்றுள்ளதோடு, தொடர் வெற்றிகளைப் பெற்று வந்த ஆஸ்திரேலியா ஏ அணியையும் நிறுத்தியது.
டார்வின் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்திரேலியா ஏ முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியாவின் மனோஜ் திவாரி 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஐபிஎல் புகழ் அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி 47.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இலக்கைத் துரத்திய இந்திய அணி 3 விக்கெட்டுகளை விரைவில் இழந்து தடுமாறிய நிலையில், அம்பாத்தி ராயுடு (77), கேதர் ஜாதவ் (52) இணைந்து அனாயசமாக 101 ரன்களைச் சேர்த்தனர்.
கேதர் ஜாதவ் ஆக்ரோஷமாக ஆடி 3 சிக்சர்களை அடித்தார். ராயுடு ஒன்று, இரண்டு, என்று ரன்களைச் சேர்த்தார்.
ஜாதவ், ஆஸ்திரேலிய கேப்டன் கேமரூன் ஒயிட்டிடம் ஆட்டமிழந்த பிறகு சஞ்சு சாம்சன் இணைந்தார், இருவரும் இணைந்து 52 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தனர். பர்வேஸ் ரசூல் 16 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க இந்தியா ஏ தொடர்ச்சியான 5வது வெற்றியைச் சாதித்துள்ளது. சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.
மிகவும் உற்சாகமாக இந்தத் தொடருக்குச் சென்ற ராபின் உத்தப்பா இன்னமும் ஒரு அரை சதம் கூட எடுக்கவில்லை. ஆனால் பந்து வீச்சை மாற்றுதல், களவியூகம் ஆகியவற்றில் திறமையாகச் செயல்பட்டு வருகிறார்.
இரு அணிகளும் நாளை இறுதிப் போட்டியில் மோதுகிறது