Published : 03 Apr 2024 09:03 AM
Last Updated : 03 Apr 2024 09:03 AM

ஹாட்ரிக் வெற்றி பெறுமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்? - டெல்லி அணியுடன் இன்று பலப்பரீட்சை

ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் | கோப்புப்படம்

விசாகப்பட்டினம்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த நிலையில் தனது கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பந்த் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர். அதேவேளையில் பந்து வீச்சில் தொடக்க ஓவர்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுவும், இறுதிக்கட்ட ஓவர்களில் முகேஷ் குமாரும் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும்.

மிட்செல் மார்ஷ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிகரிக்கும். அதேவேளையில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்க்கியா, சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் வைடு யார்க்கர்களை சிறப்பாக கையாண்டு நெருக்கடி கொடுத்தார். கொல்கத்தா பேட்ஸ்மேன்களுக்கும் அவர், அழுத்தம் கொடுக்கக்கூடும்.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி விளையாடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனதுமுதல் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்றிருந்தது. தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இன்றைய ஆட்டத்திலும் அந்த அணி சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவுசெய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் பார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு வலுசேர்த்துள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் இவர்களுடைய அதிரடியால் 19 பந்துகளை மீதம் வைத்து கொல்கத்தா அணி வெற்றி கண்டிருந்தது.

இவர்களுடன் பின் வரிசையில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோர் வலுசேர்ப்பவர்களாக திகழ்கின்றனர். பந்து வீச்சை பொறுத்தவரையில் இளம் வீரரான ஹர்ஷித் ராணா நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப ஆந்த்ரே ரஸ்ஸல் பந்து வீசுவது கூடுதல் பலமாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க மிட்செல் ஸ்டார், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் அதிக ரன்களை வழங்குவது பலவீனமாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இவர்கள் பார்முக்கு திரும்புவதில் தீவிரம் காட்டக்கூடும்.

கொல்கத்தா, குஜராத் ஆட்டங்கள் மாற்றம்: ஐபிஎல் தொடரில் வரும் 17-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஆட்டம் ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 16-ம் தேதி நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதேபோன்று ஏப்ரல் 16-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மறுநாள் 17-ம் தேதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x