Published : 25 Apr 2014 01:04 PM
Last Updated : 25 Apr 2014 01:04 PM

ஹாட்ரிக்கை நோக்கி சூப்பர் கிங்ஸ்: தோல்வியில் இருந்து மீளுமா மும்பை?

துபையில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இண்டியன்ஸும் மோதுகின்றன.

முதல் ஆட்டத்தில் பஞ்சாபிடம் தோற்றபிறகு தொடர்ச்சியாக இரு வெற்றிகளை பெற்ற சூப்பர் கிங்ஸ், ஹாட்ரிக் வெற்றிக் கனவில் மும்பையை சந்திக்கிறது. ஆனால் நடப்பு சாம்பியன் மும்பை அணியோ தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் மோசமாக தோற்ற நிலையில், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

பேட்டிங் சொதப்பல்

பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல. மும்பை அணியின் பேட்டிங் முற்றிலும் வீழ்ச்சியடைந்ததே அந்த அணி முதல் இரு ஆட்டங்களிலும் தோற்றதற்கு முக்கியக் காரணம். மும்பை அணி மைக் ஹசி, கேப்டன் ரோஹித் சர்மா, கிரண் போலார்ட், கோரே ஆண்டர்சன் என அதிரடி மன்னர்களைக் கொண்டிருந்தாலும்கூட, இவர்கள் அனைவருமே கடந்த இரு ஆட்டங்களிலும் சோபிக்கவில்லை.

இவர்களில் ஒருவர் களத்தில் நின்றுவிட்டால்கூட மும்பையின் ஸ்கோரை மட்டுமல்ல, ஆட்டத்தின் போக்கையும் மாற்றிவிடுவார்கள். ஆனால் இவர்களில் ஒருவர்கூட சரியாக ஆடாததுதான் பிரச்சினையே.

அதனால் கடந்த இரு ஆட்டங்களில் கொல்கத்தாவிடம் 41 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூரிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வி கண்டது மும்பை. அதிலும் கொல்கத்தாவுக்கு எதிராக 122 ரன்களும், பெங்களூருக்கு எதிராக 115 ரன்களும் மட்டுமே எடுத்தது மும்பை. அம்பட்டி ராயுடு மட்டுமே அந்த அணிக்கு ஓரளவு ஆறுதல் அளித்து வருகிறார்.

சுழற்பந்து வீச்சாளர்கள் தடுமாற்றம்

பந்துவீச்சைப் பொறுத்தவரை யில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகீர்கான், லசித் மலிங்கா ஆகியோர் மட்டுமே சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். ஆண்டர்சன், போலார்ட் ஆகி யோரின் பந்துவீச்சு எடுபடவில்லை. சுழற்பந்து வீச்சாளர் களில் ஹர்பஜன் சராசரியாக பந்துவீசினாலும், பிரக்யான் ஓஜா ரன்களை வழங்கிவிடுகிறார். அதேநேரத்தில் இருவரும் விக்கெட் வீழ்த்த தவறிவிட்டனர்.

இது மும்பையின் பௌலிங்கிற்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. எனவே இந்த ஆட்டத்தில் மும்பையின் முன்னணி பேட்ஸ் மேன்களும், பௌலர்களும் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அமையும்.

மிரட்டும் டுவைன் ஸ்மித்

அடுத்தடுத்த இரு வெற்றிகளால் உத்வேகம் பெற்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான பிரென்டன் மெக்கல்லம் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடியபோதும், அதன்பிறகு நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

அதேநேரத்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டுவைன் ஸ்மித் தொடர்ந்து அபாரமாக ஆடி வருகிறார். அவரின் அதிரடி இந்த ஆட்டத்திலும் தொடரும் என நம்பலாம். அவருடன் இணைந்து மெக்கல்லமும் சிறப்பாக ஆடும்பட்சத்தில் சூப்பர் கிங்ஸுக்கு வலுவான தொடக்கம் அமையும்.

பலம் வாய்ந்த மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா, டூ பிளெஸ்ஸி, கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பெரும் பலமாகத் திகழ்கின்றனர். குறிப்பாக ஜடேஜா பேட்டிங், பௌலிங் என இரு துறைகளிலும் ஜொலித்து வருகிறார். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் தடுமாறியபோது 36 ரன்களை எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்ட ஜடேஜா, 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றி தேடித்தந்தார். அவர் மும்பைக்கு எதிராகவும் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்த வரையில் பென் ஹில்பெனாஸ், ஈஸ்வர் பாண்டே, மோஹித் சர்மா கூட்டணி கலக்கி வருகிறது. அவர் களின் கலக்கல் இந்த ஆட்டத்திலும் தொடரும் என நம்பலாம்.

சென்னை - மும்பை

போட்டி நேரம் : இரவு 8

நேரடி ஒளிபரப்பு : சோனி சிக்ஸ் / செட் மேக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x