

லண்டன்: ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரும், டெஸ்ட் கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ் முழு உடல் தகுதி பெறவும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் மற்றும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்தகுதி பிரச்சினையால் போராடி வருகிறார் பென் ஸ்டோக்ஸ். சமீபத்தில் நடந்துமுடிந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார். இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாகதான் முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் பென் ஸ்டோக்ஸ்.
முழங்கால் பிரச்சினையால் சில காலமாக பந்துவீசுவதை தவிர்த்து வரும் அவர், இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தனது பந்துவீச்சு திறனை மேம்படுத்தும் நோக்கிலும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கிலும் ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணியை இம்முறை ஜோஸ் பட்லர் வழிநடத்தவுள்ளார். அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது நிச்சயமாக இங்கிலாந்துக்கு ஒரு பெரிய அடியாகும். ஏனென்றால், கடந்த 2022 டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.