

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை தழுவியுள்ளது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. இதனால் புள்ளிப் பட்டியலில் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது ஐபிஎல் அரங்கில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு சீசனின் 14-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி முதல் 4 ஓவர்களில் நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதில் மும்பையின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, நமன் திர் மற்றும் டெவால்ட் பிரெவிஸ் ஆகியோர் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினர். அவர்கள் மூவரின் விக்கெட்டையும் ராஜஸ்தான் பவுலர் ட்ரென்ட் போல்ட் கைப்பற்றி இருந்தார். கிஷனை 16 ரன்களில் வெளியேற்றினார் பெர்கர்.
5-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா இணைந்து 56 ரன்கள் சேர்த்தனர். 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியா ஆட்டமிழந்தார். திலக், 32 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து சீரான இடைவெளியில் மும்பை அணி விக்கெட்டை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது.
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் விரட்டியது. முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தினார் மபாகா. 5-வது ஓவரில் சஞ்சு சாம்சனை வெளியேற்றினார் ஆகாஷ் மெத்வால். தொடர்ந்து 7-வது ஓவரில் பட்லரையும் அவரே வெளியேறினார். அப்போது களத்துக்கு வந்த அஸ்வின், ரியான் பராக் உடன் சேர்ந்து 40 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். 16 ரன்களில் அஸ்வின் அவுட் ஆனார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரியான் பராக், 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். ஷூபம் துபே 8 ரன்கள் எடுத்திருந்தார். 15.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ராஜஸ்தான். இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது ராஜஸ்தான். நடப்பு சீசனில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது அந்த அணி.
ரியான் பராக் - ஆரஞ்சு கேப்: மூன்று போட்டிகளில் விளையாடி 181 ரன்கள் எடுத்துள்ள ரியான் பராக், ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றார். ஆர்சிபி வீரர் கோலியும் 181 ரன்கள் எடுத்துள்ளார். இருந்தும் ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் பராக், வசம் அது சென்றுள்ளது.