

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக முதல் மூன்று போட்டிகளில் முறையே 45, 37 மற்றும் 45 ரன்கள் எடுத்துள்ளார் சாய் சுதர்ஷன். 22 வயதான அவர், தற்போது பக்குவம் அடைந்து உள்ளதாகவும், தனக்கான பொறுப்புகள் கூடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எடுதராக நெருக்கடியான சூழலில் சிறப்பாக ஆடி இருந்தார்.
“இந்திய-ஏ அணிக்காகவும், தேசிய அணிக்காகவும் அதிகளவிலான போட்டிகளில் விளையாடும் அனுபவத்தின் காரணமாக இப்போது நான் பக்குவம் அடைந்துள்ளதாக கருதுகிறேன். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இப்போது எனக்கான பொறுப்புகள் கூடி உள்ளதாக கருதுகிறேன். இதோடு சேர்த்து எனது திறனும் மேம்பட்டுள்ளது. சர்வதேச கள சூழல் உட்பட வெவ்வேறு சூழலை எதிர்கொண்டு வருகிறேன். அதன் மூலம் நான் எங்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் கண்டறிந்து வருகிறேன்.
விளையாடும் பார்மெட் மற்றும் போட்டியின் சூழலுக்கு ஏற்ப களத்தில் எனது ஆட்டம் சார்ந்து ரிஸ்க் எடுப்பேன். போட்டிக்கு தயாராவதில் பெரிய வித்தியாசம் இருக்காது” என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன், ஐபிஎல் அரங்கில் 16 இன்னிங்ஸ் ஆடி 634 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 அரைசதம் பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இருந்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்காக சிறப்பாக பேட் செய்து வருகிறார்.